செய்திகள்
கொள்ளை

கோவையில் நகை கடை அதிபரை தாக்கி ரூ.70 லட்சம் கொள்ளை

Published On 2019-08-23 05:16 GMT   |   Update On 2019-08-23 05:16 GMT
கோவையில் நகை கடை அதிபரை தாக்கி ரூ.70 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பட்டாம்பியை சேர்ந்தவர் விட்டல் சேட் (வயது 36). நகை வியாபாரி. வடமாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும் பல ஆண்டுகளாக இங்கேயே குடும்பத்துடன் தங்கி வியாபாரம் செய்து வருகிறார்.

நேற்று கோவைக்கு தங்க நகை வியாபாரம் செய்ய காரில் வந்தார். காரை அதே பகுதியை சேர்ந்த அன்வர் (30) என்பவர் ஓட்டினார். கோவையில் ஆர்டர் கொடுத்த கடைகளுக்கு நகைகளை விற்பனை செய்து விட்டு ரூ.70 லட்சம் பணத்துடன் இரவு கோவையில் இருந்து பட்டாம்பிக்கு புறப்பட்டார்.

கார் மதுக்கரையை கடந்தபோது கோவையில் இருந்து வந்த மற்றொரு மர்ம கார் பின் தொடர்ந்தது. உஷாரான கார் டிரைவர் காரை வேகமாக ஓட்டினார். ஆனால் மர்ம கார் நகைக்கடை அதிபர் சென்ற காரை வழிமறித்து நிறுத்தினர்.

கார் நின்றதும் முகமூடி அணிந்த 4 பேர் இறங்கி கார் டிரைவர் அன்வரை தாக்கி சாலையோரம் தூக்கி வீசினர். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினார். பின்னர் நகைக்கடை அதிபர் விட்டல் சேட்டை அவரது காரிலேயே கடத்திச்சென்றனர்.

சிறிது தூரம் சென்றதும் காரில் வைத்து விட்டல் சேட்டை தாக்கி அவரிடம் இருந்த ரூ.70 லட்சத்தை பறித்தனர். பின்னர் கொள்ளையர்கள் வந்த காரிலேயே அவர்கள் தப்பினர்.

மயங்கம் தெளிந்து எழுந்த கார் டிரைவர் அன்வர் கோவை ரோட்டில் நடந்து வந்தார். அப்போது ரோட்டோரத்தில் கார் நிற்பதை பார்த்து அங்கு சென்றார். காரில் நகைக்கடை அதிபர் விட்டல் சேட் காயத்துடன் மயங்கி கிடந்தார்.

கொள்ளை குறித்து கார் டிரைவர் அன்வர் வாளையார் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். வாளையார் இன்ஸ்பெக்டர் மனோஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமூடி கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். கொள்ளை குறித்து உடனே கே.கே.சாவடி போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கொள்ளையர்கள் வந்த கார் மீண்டும் கோவையை நோக்கி சென்றதால் கொள்ளையர்கள் கோவையில் பதுங்கியிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

கோவையில் இருந்து கொள்ளை நடந்த இடம் வரையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்களை போலீசார் சோதனை செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News