செய்திகள்
கொள்ளை

கோவை மில் அதிபர் வீட்டில் ரூ.2 கோடி தங்க-வைர நகைகள் திருட்டு

Published On 2019-08-01 04:58 GMT   |   Update On 2019-08-01 04:58 GMT
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்த மில் அதிபர் வீட்டில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்தவர் சைலேஷ் எத்திராஜ் (வயது 53). டெக்ஸ்டைல்ஸ் மில் அதிபர்.

கடந்த 28-ந் தேதி இவர் தனது மனைவியுடன் பெங்களூரில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றார். பின்னர் மீண்டும் நேற்று வீட்டுக்கு திரும்பினார்.

அப்போது வீட்டில் உள்ள ரகசிய அறையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சைலேஷ் எத்திராஜ் உள்ளே சென்று பார்த்தார். அப்போது ரகசிய அறையில் இருந்த லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ. 15 லட்சம் மதிப்புள்ள வைர வளையல், ரூ. 50 லட்சம் மதிப்புள்ள வைர கம்மல், ரூ. 1 லட்சம் மதிப்புள்ள தாலி செயின், ரூ. 9 லட்சம் மதிப்புள்ள தங்க வளையல், ரூ. 17 லட்சத்து 50 ஆயிரம் ரொக்க பணம் உள்பட ரூ. 2 கோடியே 7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான வைரம், தங்க நகைகள் மற்றும் பணம் திருட்டு போயிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த சைலேஷ் எத்திராஜ் வீட்டில் தங்கி இருந்து வேலை செய்பவர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது இவரது வீட்டில் கடந்த 5 வருடங்களாக தங்கி இருந்து வீட்டு வேலை செய்து வந்த ஜார்க்கண்ட மாநிலத்தை சேர்ந்த பிக்காஷ்குமார் ராய் என்ற வாலிபர் மாயமாகி இருப்பது தெரியவந்தது. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனையடுத்து பிக்காஷ்குமார் ராய் மீது சந்தேகம் ஏற்பட்டது.

பின்னர் சைலேஷ் எத்திராஜ் இது குறித்து கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். திருட்டு நடந்த வீட்டில் கண்காணிப்பு கேமிரா இல்லாததால் அந்த பகுதியில் வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை போலீசார் கைபற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.

இது குறித்து தொழில் அதிபர் சைலேஷ் எத்திராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.2 கோடி தங்க, வைர நகைகள் மற்றும் பணத்துடன் மாயமான பிக்காஷ்குமார் ராயை வலை வீசி தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News