செய்திகள்
பிரதிமா என்கிற ராணி

பாலியல் தொல்லை செய்கிறார் - போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது இளம்பெண் பரபரப்பு புகார்

Published On 2019-07-23 14:23 GMT   |   Update On 2019-07-23 14:23 GMT
திருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது இளம்பெண் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் பாலியல் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர்:

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர் பிரதிமா என்கிற ராணி (32). இவர் திருப்பூர் மாநகர போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருபவர் மீது போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

எனக்கு திருமணமாகி பெண் குழந்தை உள்ளது. கணவர் பிரிந்து சென்று விட்டதால் குழந்தையுடன் தனியாக வசித்து வந்தேன். அப்போது திருச்சியை சேர்ந்த தோழி மூலம் அங்கு ஒரு கம்பெனியில் வேலையில் சேர்ந்தேன்.

அந்த சமயத்தில் எனது முதல் கணவர் என்னை போனில் டார்ச்சர் செய்தார். இதனை எனது கம்பெனி உரிமையாளரிடம் தெரிவித்தேன். அவர் திருச்சியில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சொன்னார். அதன் படி புகார் கொடுத்தேன்.

அப்போது அந்த போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக ஒருவர் இருந்தார். அவர் மனைவி இறந்து விட்டதாகவும், மகனுடன் தனியாக வசித்து வருவதாகவும் என்னை புகார் கொடுக்க அழைத்து சென்றவர் தெரிவித்தார்.

நீங்களும் பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறீர்கள். நீங்கள் இன்ஸ்பெக்டரை திருமணம் செய்து கொள்ள விருப்பட்டால் செய்து கொள்ளுங்கள் என்றார். இதனை நான் முதலில் கண்டு கொள்ளவில்லை.

அதன் பின்னர் எனது செல்போன் எண்ணை தெரிந்து கொண்டு இன்ஸ்பெக்டர் என்னுடன் பேச ஆரம்பித்தார். நானும் பேசினேன். அப்போது என்னை திருமணம் செய்து கொள். உன்னையும், குழந்தையையும் நன்றாக பார்த்து கொள்வேன் என உறுதி அளித்தார்.

நானும் எனது குழந்தையின் பாதுகாப்பு கருதி திருமணம் செய்து கொள்ள சம்மதித்தேன். திருச்சியில் தனியாக வீடு எடுத்து நாங்கள் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தோம்.

அப்போது என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள். அக்கம் பக்கத்தினர் தவறாக பேசுகிறார்கள் என்றேன். அதற்கு அவர் எனது மகனுக்கு உன்னை பிடிக்கட்டும். அதன் பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என்றார்.

நான் தொடர்ந்து வலியுறுத்தவே சாமி படம் முன் எனது கழுத்தில் தாலி கட்டினார். இந்த நிலையில் அவருக்கு ஈரோடுக்கு பணி மாறுதல் கிடைத்தது. அங்கு வந்தோம். அப்போது அவரது குடும்பத்தினரை அறிமுகப்படுத்தி வைத்தார்.

பின்னர் இன்ஸ்பெக்டரின் சொந்த ஊரான வெள்ளகோவிலில் குடியிருந்தோம். பின்னர் அவரை கோவை காந்திபுரம் போலீஸ் நிலையத்திற்கு பணி மாறுதல் செய்தனர். அங்கு 8 மாதம் குடியிருந்தோம்.

அவர் மீது வந்த குற்றச்சாட்டு காரணமாக கோவையில் இருந்து தூத்துக்குடிக்கு அவர் மாற்றப்பட்டார். இதனால் மருத்துவ விடுப்பில் இருந்தார்.

பின்னர் அவருக்கு திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட போலீஸ் நிலையத்தில் பணி கிடைத்தது. இந்த நிலையில் அவரது மகன் என்னை அம்மா என ஏற்று கொண்டான். இதனை தொடர்ந்து எனது சொந்த ஊரான கர்நாடக மாநிலம் சென்று அங்குள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டோம்.

அதன் பின்னர் தான் அவரது சுயரூபம் எனக்கு தெரிய வந்தது. அவர் மேலும் சில பெண்களுடன் தொடர்பு வைத்து உள்ளதை தெரிந்து கொண்டேன். இது குறித்து அவரிடம் கேட்ட போது அடித்து உதைத்து துன்புறுத்தினார். எனது விருப்பம் இல்லாமல் செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார்.

இது குறித்து திருப்பூர் துணை போலீஸ் கமி‌ஷனரிடம் புகார் செய்தேன். அவர் இன்ஸ்பெக்டரை எச்சரித்தார். அதன் பிறகும் என்னை அடித்து உதைத்தார். என் மீது துணை கமி‌ஷனரிடம் புகார் கொடுத்தாயா? என அடித்தார்.

இதில் எனது கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். நீ இங்கு இருக்க கூடாது. உனது தாய் வீட்டிற்கு செல் என மிரட்டினார். அவரை என்னுடம் சேர்த்து வைக்க வேண்டும். அல்லது அவரை பணியில் இருந்து நீக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ராணி கூறிய குற்றச்சாட்டுக்கு இன்ஸ்பெக்டர் மறுப்பு தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது-

கடந்த 2015-ம் ஆண்டு எனது மனைவி மற்றும் குடும்பத்தினர் விபத்தில் சிக்கி இறந்து விட்டனர். ஒரு மகன் மட்டும் காயத்துடன் தப்பினான்.

அவனை கவனிக்க ஒரு பெண்ணை வேலைக்கு அமர்த்தினேன். அவர் திடீரென வேலையை விட்டு சென்று விட்டார். இதனை தொடர்ந்து வேறு பெண் வேலை ஆள் தேடினேன்.

அப்போது தான் ராணி அறிமுகம் ஆனார். உங்களது மகனை நான் பாசமாக பார்த்து கொள்கிறேன் என்றார். அதன்படி வேலைக்கு சேர்த்தேன்.

நான் வெளியூருக்கு பணி மாறுதல் ஆகி சென்ற போதும் ராணி எங்களுடன் வந்தார். இந்த நிலையில் அவருக்கு என் மீது சந்தேகம் வந்தது. இதனால் தகராறு உருவானது.

நான் வீட்டில் இல்லாத நேரத்தில் அவர் திருப்பூரை சேர்ந்த ஒருவருடன் கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வருவதாக சந்தேகம் ஏற்பட்டது. இதனை தட்டி கேட்டேன்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர் ஜீப் கண்ணாடியை உடைத்து விட்டார். இதனால் அவரை தண்டித்தது உண்மைதான். அவர் எங்கள் வீட்டில் இருந்த 45 பவுன் நகைகளை திருடி கொண்டு சென்று விட்டு என் மீது இந்த புகாரை கொடுத்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News