செய்திகள்
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் அவினாஷ்

புதுவை பள்ளியில் ஆசிரியர் அடித்ததால் மயங்கி விழுந்த மாணவன்

Published On 2019-07-16 12:51 GMT   |   Update On 2019-07-16 12:51 GMT
புதுவை தனியார் பள்ளியில் ஆசிரியர் அடித்ததால் மயங்கி விழுந்த மாணவனுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:

புதுவை தட்டாஞ்சாவடி சுப்பையா நகரை சேர்ந்தவர் கண்ணன். இவர் புதுவை மின்துறையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி திலகம். இவர்களது மகன் அவினாஷ் (வயது 13). இவன் புதுவை நகர பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான்.

படிப்பில் முதல் மாணவனாக திகழ்ந்த அவினாஷ் வகுப்பு லீடராக இருந்து வருகிறான். இதையடுத்து பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மற்ற மாணவர்களின் ஒழுங்கு நடவடிக்கையை கண்காணித்தபடி தனக்கு அவ்வப்போது தகவல்களை தரும்படி மாணவன் அவினாசை அறிவுறுத்தினார்.

அதன்படி மாணவன் ஒருவன் முடி வெட்டாமல் இருந்ததால் அந்த மாணவன் குறித்து அவினாஷ் உடற்கல்வி ஆசிரியரிடம் புகார் தெரிவித்தான். இன்று காலை அந்த மாணவனை உடற்கல்வி ஆசிரியரை பார்த்து விட்டு வகுப்புக்கு வருமாறு அவினாஷ் கூறினான்.

இதனை அறிந்த மற்றொரு உடற்கல்வி ஆசிரியர் தனக்கு தெரிந்த மாணவனை எப்படி காட்டி கொடுக்கலாம்? என கூறி அவினாஷ் கன்னத்தில் அறைந்தார். மேலும் முட்டி போட வைத்து முதுகில் சரமாரியாக குத்தினார்.

இதில், மாணவன் அவினாஷ் மயங்கி விழுந்தான். இதனை பார்த்ததும் மற்ற மாணவர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி அவினாசின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனை கேட்டதும் பெற்றோர் அலறியடித்துக் கொண்டு பள்ளிக்கு விரைந்து வந்தனர். அதுவரை பள்ளி நிர்வாகம் மாணவனுக்கு சிகிச்சை அளிக்க எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து பெற்றோர் ஒரு ஆட்டோ மூலம் மாணவன் அவினாசை புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் காரணமாக மாணவன் படிக்கும் பள்ளியிலும், அரசு ஆஸ்பத்திரியிலும் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News