செய்திகள்
குளத்தை தூர்வாரும் பணி

தமிழக காங்கிரஸ் சார்பில் 72 குளங்கள் தூர்வாரப்படும் - கே.எஸ். அழகிரி

Published On 2019-07-08 07:33 GMT   |   Update On 2019-07-08 07:33 GMT
தமிழக காங்கிரஸ் சார்பில் 72 குளங்கள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறி உள்ளார்.
திருவள்ளூர்:

பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட தேவந்தவாக்கம் கிராமத்தில் காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் அணி சார்பில் குளத்தை தூர்வாரும் பணி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஏ.ஜி. சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது.

இதனை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத குடிநீர் பற்றாக்குறை இந்த ஆண்டு நிகழ்ந்து உள்ளது. இதனை போக்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க தவறியதே காரணம்.

குடிநீர் பற்றாக்குறையை போக்க ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநில முதல்வர்களிடம் தமிழக அரசு கேட்டு பெற வேண்டும்.

பருவமழை பொய்த்து போன நேரத்தில் முன் கூட்டியே தண்ணீர் வசதி செய்து தராமல், காலம் தாழ்த்தி சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளனர்.

தமிழக அரசை குறை சொல்வது காங்கிரசின் நோக்கமல்ல. செய்ய வேண்டியதை குறித்த நேரத்தில் செய்யாததே குடிநீர் பற்றாக்குறைக்கு காரணம்.

தமிழக காங்கிரஸ் சார்பில் 72 குளங்கள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கட்சி நிர்வாகிகள் நாகராஜ், ஜெ.கே. வெங்கடேஷ், அருள்மொழி, வேதமுர்த்தி, தமயன் ஜான், மோகன்தாஸ் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News