செய்திகள்
விபத்தில் பலியான ருக்மணி

விபத்தில் பெண் பலி- அரசு ஆஸ்பத்திரி சூறை

Published On 2019-07-03 12:51 GMT   |   Update On 2019-07-03 12:51 GMT
விபத்தில் பெண் பலியானதால் பெண்ணின் உறவினர்கள் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியை சூறையாடினர். இதனால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

மேட்டுப்பாளையம்:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள குட்டையூர் பாவேந்தர் நகரை சேர்ந்தவர் ராஜன் (43). கூலித் தொழிலாளி. இவரது மனைவி ருக்மணி (36).

நேற்று கணவன்-மனைவி மோட்டார் சைக்கிளில் பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர். அங்கு சாமி கும்பிட்டு விட்டு ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தனர். அவர்கள் மாலை 6 மணியளவில் மேட்டுப்பாளையம் - காரமடை சாலையில் உள்ள தியேட்டர் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ராஜன் அவரது மனைவி ருக்மணி ஆகியோர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.

அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் ருக்மணியை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால் ராஜன் உறவினர்கள் ருக்மணியை கோவைக்கு அழைத்து வராமல் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர், அங்கு ருக்மணியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவரை மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ருக்மணியை அவரது உறவினர்கள் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வழியிலே அவர் உயிரிழந்தார்.

விபத்தில் காயம் அடைந்த ருக்மணிக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காமல் தாமதமாக சிகிச்சை அளித்ததாக கூறி அவரது உறவினர்கள் அங்கு பணியில் இருந்த டாக்டர் லட்சுமண குமாரை பிடித்து கீழே தள்ளி தாக்கினார்கள். நர்சு மகாலட்சுமி, மருத்துவமனை ஊழியர் குமாரசாமியையும் தாக்கினார்கள். மேஜை மீது வைத்திருந்த மாத்திரை வைத்திருந்த பெட்டிகளை தூக்கி வீசி உடைத்தனர்.

மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்த விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு விளம்பர பலகைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மேலும் மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து மருத்துவமனை முன் நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் பெரிய நாயக்கன் பாளையம் டி.எஸ்.பி. மணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதனால் சமாதானம் அடைந்த ருக்மணி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கலைந்து சென்றனர். பொதுமக்கள் போராட்டம் காரணமாக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டு இருந்த ருக்மணி உடல் நள்ளிரவு 12.30 மணியளவில் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்கப்பட்டது.


டாக்டர் லட்சுமண குமார், நர்சு மகாலட்சுமி, மருத்துவ மனை ஊழியர் குமார சாமி ஆகியோர் தாக்கப்பட்டதை கண்டித்து மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று காலை பணிக்கு வந்த அவர்கள் எந்த பணியிலும் ஈடுபடாமல் அங்கு ஒன்றாக கூடி நின்றனர்.

மேலும் புற நோயாளிகளுக்கு சீட்டு வழங்கும் அறையும் திறக்கப் படவில்லை. இதனால் புற நோயாளிகள் பெரும் அவதிக்கு ஆளானார்கள். அவர்கள் ஆஸ்பத்திரி வளாகத்தில் குவிந்து இருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள், நர்சுகளிடம் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், சுகாதார பணிகள் துறை இணை இயக்குனர் கிருஷ்ணா, மேட்டுப் பாளையம் தாசில்தார் சாந்தாமணி, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் நல சங்க மாநில செயலாளர் ரவிசங்கர், மாவட்ட செயலாளர் ஜெய்சிங் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க மாநில தலைவி தாரகேஸ்வரி, மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரி தலைமை நர்சு சாரதாமணி ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் கூறும்போது, டாக்டர்கள் மற்றும் நர்சை தாக்கி அரசு சொத்தை சேதப்படுத்திய குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் புறகாவல் நிலையம் அமைக்க வேண்டும். குற்றவாளிகளை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றனர்.

இந்த நிலையில் காலை 11 மணியளவில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் நலச்சங்க மாநில செயலாளர் ரவிசங்கர் தலைமையில் ஆஸ்பத்திரி வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர். இதில் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் சேரலாதன், இந்திய மருத்துவ கழக மேட்டுப்பாளையம் கிளை தலைவர் டாக்டர் இஸ்மாயில், செயலாளர் சசிந்ரா மற்றும் டாக்டர்கள், நர்சுகள் கலந்து கொண்டனர்.

மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் நர்சை தாக்கிய காட்சி அங்குள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி உள்ளது. அதனை வைத்து குற்றவாளிகளை பிடிக்க மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன், காரமடை இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.

அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அனிதா தலைமையில் டி.எஸ்.பி.க்கள் மணி, வேல்முருகன், பயிற்சி டி.எஸ்.பி. தேனிமொழிவேல் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News