செய்திகள்
திருமாவளவன்

மத்திய அரசின் ஒரே தேசம், ஒரே தேர்தல் ஆபத்தானது - திருமாவளவன்

Published On 2019-06-30 07:10 GMT   |   Update On 2019-06-30 07:10 GMT
மத்திய அரசின் ஒரே தேசம், ஒரே தேர்தல் என்பது ஆபத்தான கொள்கை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறி உள்ளார்.
மதுரை:

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவை ஆணவ படுகொலை தொடர்பாக அங்கு கூடிய விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். முஸ்லிம் பெண்களை காப்பாற்ற சட்டம் கொண்டு வந்த மோடி, இந்து பெண்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்காதது ஏன்?

நீட் தேர்வில் மத்திய தொகுப்புக்கான இட ஒதுக்கீட்டை கைவிட வேண்டும். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும்.



சென்னையில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதையடுத்து கேரள முதல்வர் பினராயி விஜயன், தண்ணீர் கொடுக்க முன் வந்தார். ஆனாலும் தமிழக அரசு வறட்டு கவுரவம் கருதி, அவரது கோரிக்கையை நிராகரித்து விட்டது.

தமிழகத்தின் குடிதண்ணீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் மத்திய-மாநில அரசுகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தை பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவித்து நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.

பாராளுமன்றத்தில் ஆணவ படுகொலைகளை தவிர்க்கும் வகையில் குரல் கொடுப்பேன். மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கை ஆபத்தானது. இதனை மத்திய அரசு தன்னிச்சையாக செயல்படுத்த நினைக்கிறது. இது இந்தியாவை காவிமயமாக்க மோடி எடுத்திருக்கும் முயற்சிகளில் ஒன்று.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைப்போம்.

மேலூர் தும்பைபட்டி பகுதியில் நடந்த படுகொலையில் விடுதலை சிறுத்தைகளுக்கு தொடர்பு கிடையாது. பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். அங்கு 144 தடை உத்தரவு தேவையற்ற ஒன்று.

விடுதலை சிறுத்தைகளுக்கு எதிராக ஒன்றிரண்டு அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டதாகவும், அதன் பேரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் காவல் துறை சொல்கிறது. இருந்த போதிலும் அது தேவையற்ற நடவடிக்கை.

மத்திய அரசின் ஒரே தேசம். ஒரே தேர்தல் என்பது ஆபத்தான கொள்கை. இது அதிபர் ஆட்சிக்கு வித்திடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News