செய்திகள்

நாய்கடித்த சிறுமிக்கு ஊசி போட மறுப்பு- நர்சுடன் பெற்றோர் வாக்குவாதம்

Published On 2019-06-27 13:23 GMT   |   Update On 2019-06-27 13:23 GMT
பரமத்தி அரசு ஆஸ்பத்திரியில் நாய் கடித்த சிறுமிக்கு ஊசி போட நர்சு மறுப்பு தெரிவித்ததால் அவருடன் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி அகதிகள் முகாமை சேர்ந்தவர் ஹரிகரன். இவரது மனைவி யோகேஸ்வரி. இவர்களது மகள் புனிதா(வயது 4). புனிதாவுக்கு 4 நாட்கள் காய்ச்சல் இருந்தது. இதனால் பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இன்று காலை புனிதா பெட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது அங்கு சில நாய்கள் சண்டை போட்டுக் கொண்டு இருந்தது. அதன் அருகில் குழந்தை புனிதா நடந்து சென்றார். திடீரென நாய்கள் புனிதாவை கடித்துவிட்டது. இதை பார்த்த அவரது பெற்றோர் நாய்களை துரத்திவிட்டு குழந்தையை தூக்கி சென்று, ஆஸ்பத்திரி நர்ஸ் விஜயலட்சுமியிடம் என் மகளை நாய் கடித்துவிட்டது, ஊசி போடுங்கள் என்று கூறினர். ஆனால் நர்ஸ் 7 பேருக்கு நாய் கடித்தால் மட்டுமே ஊசி போட முடியும் என்று சொல்லி மறுத்து விட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் நர்சிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து ஆஸ்பத்திரியின் உயர் அதிகாரி டாக்டர் சாந்திக்கு போனில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் பற்றி தெரிவித்தனர். விடுமுறையில் இருந்த அவர் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு வந்து சிறுமிக்கு ஊசி போட்டார். மேலும் புனிதாவின் பெற்றோரையும் சமாதானப்படுத்தினார். இந்த சம்பவத்தால் ஆஸ்பத்திரியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து ஆஸ்பத்திரியில் சுற்றி திரியும் நாய்களை பிடிக்க நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். 

Tags:    

Similar News