செய்திகள்

தஞ்சையில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் - எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு

Published On 2019-06-22 13:47 GMT   |   Update On 2019-06-22 13:47 GMT
குடிநீர் தட்டுபாட்டை தீர்க்கக்கோரி தஞ்சையில் தி.மு.க.வினர் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்:

பருவமழை பொய்த்ததால் தமிழகம் முழுவதும் கடும் குடிநீர் நிலவி வருகிறது. இதற்கு தீர்வு காணாத அ.தி.மு.க அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

அதன்படி தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு இன்று மாவட்ட தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாண சுந்தரம் ஆகியோர் தலைமை தாங்கினர். எம்.பி. எஸ். எஸ். பழனிமாணிக்கம், எம்.எல்.ஏ.க்கள் டிகே.ஜி. நீலமேகம், ராமச்சந்திரன், அன்பழகன், கழக தேர்தல் பணிக்குழுத் தலைவர் கணேசன், வர்த்தக அணி தலைவர் உபயதுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது குடிநீர் பிரச்சினையைத் தீர்க்காத அ.தி.மு.க அரசை கண்டித்து பல்வேறு கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. தண்ணீர் பிரச்சனையை சித்தரிக்கும் வகையில் பெண்கள் காலி குடங்களுடன் கலந்து கொண்டனர். குடிநீர் பிரச்சனையை உடனே தீர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த தி.மு.க.வினர் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைச் செயலாளர் புண்ணியமூர்த்தி நன்றி கூறினார்.
Tags:    

Similar News