செய்திகள்

குடிமராமத்துப்பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுக- டிடிவி தினகரன்

Published On 2019-06-15 09:54 GMT   |   Update On 2019-06-15 09:54 GMT
தமிழகத்தில் 2 ஆண்டுகளாக நடந்த குடிமராமத்து பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு முழுவதும் ஏரி, குளம், ஆறு, கால்வாய் போன்றவற்றைத் தூர்வாரி பராமரிப்பதற்காக 2017-ம் ஆண்டு ரூ.100 கோடியும், 2018-ம் ஆண்டு ரூ.331 கோடியும் ஒதுக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான இடங்களில் இந்த நிதியைக் கொண்டு குடிமராமத்துப் பணிகளை பெயரளவுக்குச் செய்துவிட்டு வேலை முடிந்துவிட்டதாக கணக்கு காட்டியுள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

அதனை நிரூபிக்கும் வகையில் ஆறுகளிலும், வாய்க்கால்களிலும் ஆளுயரத்திற்குப் புதர் மண்டி கிடந்ததையும் கடந்த இரண்டு ஆண்டுகளில் நம்மால் பார்க்க முடிந்தது. ஏரி, குளங்களிலும் இதே நிலைமைதான் இருந்தது. இதனால் காவிரி நீர் கடைமடை பாசனப் பகுதிகளுக்குச் சென்று சேரவில்லை என்ற புகாரும் எழுந்தது. அப்படியானால் இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி எல்லாம் எங்கே போனது என்ற கேள்வி எழுகிறது.

இந்நிலையில் நடப்பாண்டில் குடிமராமத்துக்கு பணிகளுக்காக ரூ.500 கோடி ஒதுக்கப்படுவதாக பழனிசாமி அரசு அறிவித்திருக்கிறது.

தமிழகம் முழுவதும் கடுமையான குடிநீர்ப் பஞ்சத்தில் மக்கள் தவியாய் தவிக்கும் போது, அதனை எதிர்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத ஆட்சியாளர்கள், மக்களைத் திசை திருப்பவே இதுபோன்ற வெற்று அறிவிப்புகளை வெளியிடுகின்றனர்.

கடந்த இரண்டாண்டுகளாக குடிமராமத்துப் பணியின் கீழ் எந்தெந்த நீர்நிலைகள் தூர்வாரி சீரமைக்கப்பட்டன என்ற வெள்ளை அறிக்கையை அரசு உடனடியாக வெளியிட வேண்டும். புதிதாக ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியைக் கொண்டு எந்தெந்த நீர்நிலைகளில் என்னென்ன பணிகள் நடைபெறவிருக்கின்றன என்ற பட்டியலையும் மாவட்ட வாரியாக வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
Tags:    

Similar News