செய்திகள்

கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் பெண் டாக்டரை மிரட்டிய வாலிபர் கைது

Published On 2019-06-15 06:40 GMT   |   Update On 2019-06-15 06:40 GMT
கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் ஒரு வாலிபர் பெண் டாக்டரை மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் கிருபாவதி என்ற டாக்டர் பணிபுரிந்து வருகிறார்.

நேற்று இரவு அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றியபோது ஒரு வாலிபர் குடிபோதையில் தான் விபத்தில் சிக்கி கொண்டதாகவும், உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறி சத்தம் போட்டார்.

அப்போது டாக்டர் கிருபாவதி அந்த வாலிபரிடம் குடிபோதையில் இருப்பதால் சிகிச்சை அளிக்க முடியாது என்று கூறினார்.

இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் டாக்டர் கிருபாவதியை மிரட்டியதாக தெரிகிறது.

இதுகுறித்து டாக்டர் கிருபாவதி கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

புகாரின்பேரில் போலீசார் உடனே அங்கு சென்று குடிபோதையில் இருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் லண்டன் பேட்டையைச் சேர்ந்த முருகன் மகன் பிரதீப் (வயது20) என்பதும், தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார் என்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் கல்லூரி மாணவர் பிரதீப்பை கைது செய்தனர்.

ஏற்கனவே மேற்கு வங்காளத்தில் ஒரு டாக்டரை தாக்கியதற்காக அரசு ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று நாடு முழுவதும் டாக்டர்கள் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் ஒரு வாலிபர் பெண் டாக்டரை மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News