செய்திகள்

மு.க.ஸ்டாலின் தங்கும் விடுதி-பிரசார வாகனத்தில் பறக்கும்படையினர் அதிரடி சோதனை

Published On 2019-05-14 03:49 GMT   |   Update On 2019-05-14 04:19 GMT
2-ம் கட்ட பிரசாரத்திற்காக மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி வரும் நிலையில் அவர் தங்கும் விடுதி மற்றும் வாகனங்களில் பறக்கும்படையினர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி:

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கடந்த 30-ந் தேதி முதல் 3 நாட்கள் முதற்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது மக்கள் நலச்சங்கங்களுடன் கலந்துரையாடல், மக்களோடு மக்களாக நடைபயணம், வேன் பிரசாரம், திண்ணை பிரசாரம் என பல்வேறு வகைகளில் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார்.

இந்நிலையில் 2-வது கட்ட பிரசாரத்திற்காக மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை தூத்துக்குடி வந்தார். அவர் மாலையிலேயே பிரசாரம் செய்வதால், அதுவரை தங்கி ஓய்வெடுப்பதற்காக தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் தனியார் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனால் அந்த விடுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்யும் பிரசார வேன் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான பறக்கும்படையினர் மு.க.ஸ்டாலின் தங்க இருந்த தனியார் விடுதிக்கு இன்று காலை திடீரென வந்தனர். அவர்கள் அந்த விடுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் மு.க.ஸ்டாலினின் பிரசார வேன் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த தி.மு.க.வினரின் வாகனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் பணம் எதுவும் சிக்கவில்லை.

2-ம் கட்ட பிரசாரத்திற்காக மு.க.ஸ்டாலின் வரும் நிலையில் அவர் தங்கும் விடுதி மற்றும் வாகனங்களில் பறக்கும்படையினர் சோதனை நடத்தியது தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News