செய்திகள்

4 தொகுதி இடைத்தேர்தல் - எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் மீண்டும் பிரசாரம்

Published On 2019-04-26 10:26 GMT   |   Update On 2019-04-26 10:26 GMT
அரவக்குறிச்சி, சூலூர் உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் பிரசாரம் செய்ய உள்ளனர். #TNByPolls #Edappadipalaniswami #MKStalin
சென்னை:

அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும், அடுத்த மாதம் 19-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் நேரடியாக மோதுகிறார்கள். தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவையும் இடைத்தேர்தலில் களம் இறங்குகின்றன. இதன் மூலம் 4 தொகுதிகளிலும் 5 முனை போட்டி நிலவுகிறது.

அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், தி.மு.க. வேட்பளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினும் பிரசாரம் செய்ய உள்ளனர். 2 பேரும் 1-ந்தேதி முதல் தங்களது பிரசாரத்தை தொடங்குகின்றனர்.

கமல்ஹாசன், தினகரன், சீமான் ஆகியோரும் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளனர்.

இன்னும் 4 நாட்களில் பிரசார களம் களை கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாராளுமன்றம் மற்றும் 18 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் ஒரு மாத காலமாக தீவிர பிரசாரம் செய்த தலைவர்கள் தற்போது சிறிது ஓய்வில் உள்ளனர். இவர்கள் அனைவரும் 4 தொகுதிகளிலும் மீண்டும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளிலும் பறக்கும்படை சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் பணம், பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பது பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். 4 தொகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வேட்பாளர்கள் பகல் நேர பிரசாரத்தை தவிர்த்து காலை மற்றும் மாலை நேரங்களில் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

அரவக்குறிச்சியில் 105 டிகிரியை தாண்டி கொளுத்தும் வெயிலால் தேர்தல் பணிக்கு வந்த கட்சி நிர்வாகிகள் விடுதி அறைகளிலும், வீடுகளிலும் முடங்கி கிடக்கிறார்கள். மாலை நேரங்களில் மட்டும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகின்றனர்.

இந்த தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 5 மற்றும் 14-ந்தேதிகளிலும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் 7, 8-ந்தேதிகளிலும், தினகரன் 3, 4, 10, 14-ந்தேதிகளிலும், கமல்ஹாசன் 12, 13, 16-ந் தேதிகளிலும் பிரசாரம் செய்கிறார்கள்.

இவர்களும் பகல் நேர பிரசாரத்தை தவிர்த்து மாலை நேரங்களிலேயே தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்கள். #TNByPolls #Edappadipalaniswami #MKStalin
Tags:    

Similar News