செய்திகள்

தென்காசி, செங்கோட்டையில் பலத்த மழை - குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது

Published On 2019-04-23 06:35 GMT   |   Update On 2019-04-23 06:35 GMT
தென்காசி, செங்கோட்டையில் பெய்துள்ள பலத்த மழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் இன்று தண்ணீர் நன்றாக கொட்டுகிறது. #Rain
தென்காசி:

நெல்லை மாவட்டத்தில் கடந்த வாரம் வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வெப்பம் குறைந்து ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. நேற்று முதல் இன்று காலை வரை அதிகபட்சமாக தென்காசியில் 41.5 மில்லி மீட்டர் மழையும், செங்கோட்டையில் 41 மில்லி மீட்டர், சிவகிரியில் 40 மில்லி மீட்டர், ஆய்க்குடியில் 39.4 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

கருப்பாநதி அணை பகுதியில் 38 மில்லி மீட்டர், அடவிநயினார் அணை பகுதியில் 23 மில்லி மீட்டர், குண்டாறு 21 மில்லி மீட்டர், ராமநதி அணை பகுதியில் 18 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. நேற்று இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணி வரை சூறைக்காற்றுடன் பலத்த இடி- மின்னலுடன் தென்காசி, செங்கோட்டை, புளியரை, இலஞ்சி, கணக்கப்பிள்ளை வலசை பகுதியில் கனமழை கொட்டியது.

அப்போது குண்டாறு பாலம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பெரிய மரம் சரிந்து விழுந்தது. இதில் உயர் அழுத்த மின் கம்பங்கள் முறிந்து மின் கம்பிகள் அறுந்து சாலைகளில் விழுந்தன. இதனால் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக மின் வாரிய அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து செயல்பட்டு மின்சாரத்தை துண்டித்தனர். இதனால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. போக்குவரத்து வல்லம் வழியாக மாற்று பாதையில் அனுப்பப்பட்டது.

பலத்த மழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் இன்று தண்ணீர் நன்றாக கொட்டுகிறது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் இன்று நன்றாக தண்ணீர் விழுந்ததால், சுற்றுலா பணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. வழக்கமாக மே மாதம் இறுதியில் தான் குற்றால சீசன் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் இறுதியில் கோடை மழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இதுபோல நெல்லை மாவட்டத்தின் பிற பகுதியான கடனாநதி அணைப்பகுதியில் 10 மில்லி மீட்டர், சங்கரன் கோவிலில் 5 மில்லி மீட்டர், கண்ணடியன் கால்வாயில் 2.6 மில்லி மீட்டர், பாபநாசத்தில் 2 மில்லி மீட்டர், அம்பையில் 2 மில்லி மீட்டர், சேர்வலாறு 1 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. வறண்டு கிடந்த பாபநாசம் அணைக்கு மழை காரணமாக வினாடிக்கு 4.86 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 16.85 அடியாக குறைந்த அளவில் உள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 54.75 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 34 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 76 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 48.69, கடனாநதி-27.40, ராமநதி-25, கருப்பாநதி-31.20, குண்டாறு-11.62, அடவிநயினார்-15 அடிகளாகவும் நீர்மட்டம் உள்ளது.

இந்நிலையில் வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இலங்கையிலும், தென் தமிழகத்திலும் தொடர்ந்து மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.#Rain
Tags:    

Similar News