செய்திகள்

100 நாள் வேலை திட்டம் குறித்து காங்கிரஸ் பொய் பிரசாரம் - பொன்.ராதாகிருஷ்ணன்

Published On 2019-04-13 09:17 GMT   |   Update On 2019-04-13 09:17 GMT
100 நாள் வேலை திட்டம் குறித்து காங்கிரஸ் பொய் பிரசாரம் செய்து வருவதாக கன்னியாகுமரி பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார். #PonRadhakrishnan #MGNREGA
நாகர்கோவில்:

கன்னியாகுமரி பா.ஜனதா வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் கிராமங்களில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் பெருக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் இதுவரை 99,952 நபர்களுக்கு நமது மாவட்டத்தில் வேலை அடையாள அட்டை வழங்கப்பட்டு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.



மேலும் இவர்களுடைய ஊதியம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ரூ.163 ஆக இருந்த சம்பளம் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி காலத்தில் ரூ.229 ஆக தினக்கூலி உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 100 நாள் வேலை உறுதி திட்டம் 150 நாளாக உயர்த்தப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த உண்மைகளை வேண்டுமென்றே மறைத்து காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் ரத்து செய்யப்படும் என்ற பொய் செய்தியை தொடர்ந்து கிராமங்களில் பரப்பி வருகிறார்.

இந்த பொய்யுரைகளை நமது மாவட்ட மக்கள் நம்ப மாட்டார்கள். எனினும் இது குறித்த உண்மையை நமது மக்களுக்கு சொல்வதை எனது கடமையாக கருதுகிறேன். மத சார்பற்ற கூட்டணி என்று தெரிவித்துவிட்டு காங்கிரஸ் வேட்பாளர் செல்லும் இடங்களில் எல்லாம் மத கலவரத்தை தூண்டும் வகையில் பிரசாரம் செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தனது நிறுவன பொருட்கள் மூலம் பணத்தை கொடுப்பதாக செய்திகள் வருகின்றன.

படிப்பறிவு உள்ள நமது மாவட்ட மக்களின் வாக்குகளை எவராலும் விலை கொடுத்து வாங்கிடமுடியாது என்பதை கூடிய விரைவில் காங்கிரஸ் வேட்பாளர் உணர்ந்து கொள்வார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார். #PonRadhakrishnan #MGNREGA

Tags:    

Similar News