செய்திகள்

கோதாவரியுடன் காவிரி இணைப்பு என்பது பிரச்சனையை திசை திருப்பும் முயற்சி- பழனிசாமிக்கு பாண்டியன் கண்டனம்

Published On 2019-04-01 10:06 GMT   |   Update On 2019-04-01 10:06 GMT
கோதாவரியுடன் காவிரி இணைப்பு என்பது பிரச்சனையை திசை திருப்பும் முயற்சி என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பி.ஆர்.பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில அளவிலான நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. மாநில தலைவர் புண்ணிய மூர்த்தி தலைமை வகித்தார்.

கூட்டத்தில் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கலந்து கொண்டு பேசினார்.

இதன்பிறகு பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரிக்கு மாற்று காவிரி தான். தற்போது கோதாவரியை காவிரியுடன் இணைப்போம் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். மத்திய, மாநில அரசுகள் காவிரி பிரச்சனையை திசை திருப்ப முயற்சிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.

கடந்த 2 நாட்களாக காவிரி டெல்டா மாவட்டங்களில் பிரசாரம் செய்து வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஹைட்ரோ கார்பன் திட்டம் மற்றும் பெட்ரோலிய ரசாயன மண்டலமாக அறிவித்துள்ளது குறித்தும் தனது நிலையை தெளிவு படுத்தாமல் மூடி மறைக்க முயற்சிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் சீர்குலைந்துள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை பெற்றுக் கொண்டு இரண்டு மாதங்களாகியும் பணம் பட்டுவாடா செய்யாமல் காலம் கடத்தப்படுகிறது. கொள்முதல் செய்யப்பட்ட பல லட்சக்கணக்கான மூட்டைகள் கொள்முதல் நிலையங்களிலேயே தேங்கி மக்கி வருவது வேதனையளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News