செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் கப்புகளை படத்தில் காணலாம்

சேலம் புதிய பஸ் நிலையம் அருகே பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை - வியாபாரிக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

Published On 2019-03-19 15:50 GMT   |   Update On 2019-03-19 15:50 GMT
சேலம் புதிய பஸ் நிலையம் அருகே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. #PlasticBan
சேலம்:

தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் கவர், கப்புகள் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து சேலம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்வதை தடுக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டதோடு, துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.

இதையடுத்து சேலத்தில் உள்ள ஓட்டல்கள், மளிகை கடைகள், மருந்து கடைகள், கறிக்கடைகளில் பிளாஸ்டிக் கவர்கள், கப்புகள் போன்றவற்றை தவிர்த்து வந்தனர். அதற்கு பதிலாக துணிப்பைகள் வழங்கி வந்தனர்.

இந்த நிலையில் சில கடைகளில் ரகசியமாக பிளாஸ்டிக் கவர்கள் விற்கப்படுவதாக மாநகராட்சி நகர்நல அலுவலர் பார்த்திபனுக்கு தகவல் வந்தது.

இதையடுத்து இன்று காலை புதிய பஸ் நிலையத்தில் உள்ள பழக்கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது அவர்கள் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தியது தெரியவந்தது. இதுகுறித்து அவர்களிடம் இந்த கவர்களை எங்கிருந்து வாங்கினீர்கள் என்று கேட்டார்.

அதற்கு அவர்கள் ஆலமரத்துகாடு பகுதியில் உள்ள ஒரு கடையில் வாங்கினோம் என்று கூறினார்கள். உடனே நகர்நல அதிகாரி பார்த்திபன், சுகாதார அதிகாரி ரவிச்சந்திரன், ஆய்வாளர் ஆகியோர் வீரபாண்டி நகரில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினார்கள்.

அப்போது ஆலமரத்து காட்டில் உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் கட்டுக்காட்டாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பிளாஸ்டிக் கவர்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர். 200 கிலோ மதிப்புள்ள இவற்றின் மதிப்பு ரூ. 2 லட்சம் ஆகும்.

இதையடுத்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். #PlasticBan
Tags:    

Similar News