செய்திகள்

தஞ்சையில் மணப்பெண் அறையில் புகுந்து 60 பவுன் நகையை திருடிய மர்ம நபர்

Published On 2019-03-17 10:36 GMT   |   Update On 2019-03-17 10:36 GMT
தஞ்சை திருமண மண்டபத்தில் மணப்பெண் அறையில் புகுந்து 60 பவுன் நகையை திருடிய மர்மநபர், போலீசாரை கண்டதும் நகையை போட்டுவிட்டு தப்பி சென்று விட்டார்.

தஞ்சாவூர்:

தஞ்சை செல்வம் நகரில் ஒரு தனியார் திருமண மண்டபம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று இரவு தஞ்சையை சேர்ந்த மணப்பெண் வீட்டார் தங்கியிருந்தனர். இன்று காலை திருமணம் நடைபெற இருந்ததால் வெளியூரிலிருந்து வந்த மணப்பெண்ணின் உறவினர்களும் திருமண மண்டபத்தில் தங்கியிருந்தனர்.

இந்த நிலையில் மணப்பெண்ணுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் மணப்பெண் தனது திருமணத்திற்கு செய்யப்பட்ட 60 பவுன் நகைகளை ஒரு பையில் வைத்து அதனை தலையணைக்கு அடியில் வைத்துவிட்டு தூங்கினார்.

நள்ளிரவு மணப்பெண் அறைக்குள் புகுந்த கொள்ளையன் தலையணைக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த 60 பவுன் நகையை எடுத்துக்கொண்டு தப்பி செல்ல முயன்றான்.

அப்போது தண்ணீர் குடிப்பதற்காக எழுந்த மணப்பெண் உறவினர் ஒருவர் மர்மநபர் பையுடன் செல்வதை கண்டு திடுக்கிட்டார். அவர் சந்தேகமடைந்து திருடன்... திருடன் என்று சத்தம் போட்டார். இதை தொடர்ந்து மண்டபத்திலிருந்த உறவினர்கள் சிலர் எழுந்து வந்து மர்மநபரை விரட்டி சென்றனர்.

இதுபற்றி தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். இதனை கண்ட மர்ம நபர் தன்னை பிடித்துவிடுவார்கள் என்று பயந்து கையில் வைத்திருந்த நகை பையை கீழே போட்டுவிட்டு தப்பி சென்றுவிட்டான். அதனை கைபற்றி போலீசார் மணப்பெண் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

இதுபற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.

திருமண மண்டபத்தில் கொள்ளையன் புகுந்து 60 பவுன் நகையை திருடி செல்ல முயன்ற சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News