செய்திகள்
மனைவியுடன் பாலகிருஷ்ண ரெட்டி

ஓசூர் தொகுதியில் போட்டியிட பாலகிருஷ்ணரெட்டி மனைவி விருப்பமனு

Published On 2019-03-14 09:17 GMT   |   Update On 2019-03-15 04:32 GMT
ஓசூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி ஜோதி அ.தி.மு.க. தலைமை கழகத்தில் மனு கொடுத்துள்ளார். #LSPolls
சென்னை:

கடந்த 1998-ம் ஆண்டு ஓசூர் அருகே கள்ளச்சாரயத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது அரசு பஸ்சின் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

இதுதொடர்பாக தமிழக அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டு இருந்தது.

அவர் மீதான வழக்கை விசாரித்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

இதனால் அவர் தனது அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் (ஓசூர் தொகுதி) ராஜினாமா செய்தார்.

இதையடுத்து ஓசூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பாராளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள ஓசூர் உள்பட 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது.

இதற்கிடையே ஓசூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி ஜோதி அ.தி.மு.க. தலைமை கழகத்தில் மனு கொடுத்துள்ளார்.

இது குறித்து பாலகிருஷ்ணரெட்டி கூறும்போது, “எனது மனைவி 2006-ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகள் ஓசூர் பஞ்சாயத்தில் கவுன்சிலராக இருந்துள்ளார். பொது வாழ்வில் அவருக்கு நல்ல அனுபவம் உள்ளது.

ஓசூர் தொகுதியில் எனது மனைவி போட்டியிடுவது பற்றி கட்சி மேலிடம் முடிவு செய்யும்” என்றார். #LSPolls
Tags:    

Similar News