செய்திகள்

கரூர் அருகே கார் மீது லாரி மோதல் - காயமின்றி உயிர் தப்பிய அமைச்சர்

Published On 2019-02-27 10:58 GMT   |   Update On 2019-02-27 10:58 GMT
கரூர் அருகே விபத்தில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிக்கிய சம்பவம் அ.தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #ADMK #MinisterVijayabaskar
கரூர்:

கரூர் மாவட்டம் ரெங்கநாதன்பேட்டையில் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் கரூர் சென்றார். க.பரமத்தி அருகே சென்றபோது, தென்னிலை பகுதியில் உள்ள குவாரியில் இருந்து ஜல்லிக்கற்கள் லோடு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்தது.

இந்த நிலையில் எதிர்பாராத விதமாக லாரி, அமைச்சர் காரின் பக்கவாட்டில் மோதியது. இதில் காரின் முன்பக்க விளக்குகள் உடைந்து சேதமானது. இந்த விபத்தில் காரில் இருந்த அமைச்சர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.

இதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் கரூர் வரை அதே காரில் சென்று அங்கிருந்து வேறொரு காரில் பொதுக்கூட்டத்திற்கு புறப்பட்டு சென்றார். இந்த விபத்து குறித்து க.பரமத்தி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது லாரியை ஓட்டி வந்தது தஞ்சையை சேர்ந்த சிவக்குமார் என்பது தெரிய வந்தது. மதுபோதையில் அவர் வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 23-ந்தேதி நடந்த கார் விபத்தில் விழுப்புரம் தொகுதி அ.தி.மு.க. எம்.பி., ராஜேந்திரன் இறந்தார். மறுநாள் கள்ளக்குறிச்சி அ.தி.மு.க. எம்.பி. காமராஜ் கார் விபத்தில் சிக்கி காயத்துடன் தப்பினார். இந்த நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் விபத்தில் சிக்கியது அ.தி.மு.க. கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #ADMK #MinisterVijayabaskar
Tags:    

Similar News