செய்திகள்

கிளாம்பாக்கத்தில் ரூ.393 கோடியில் புதிய பஸ் நிலையம் - எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்

Published On 2019-02-22 09:42 GMT   |   Update On 2019-02-22 09:42 GMT
வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடியில் புதிய பஸ் நிலையம் அமைக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார். #EdappadiPalanisami #ADMK

சென்னை:

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் மாநகர பஸ்களும், புறநகர் பஸ்களும் தனித்தனியாக இயக்கப்படுகிறது. இங்கு நாளுக்கு நாள் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருவதால் அதிக அளவில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இதனால் கோயம்பேடு பஸ் நிலையம் மற்றும் அதை சுற்றி உள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதை தவிர்ப்பதற்காக வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ) ஏற்பாடு செய்து வந்தது.

கிளாம்பாக்கத்தில் விஜிபி மைதானத்தையொட்டி 44.74 ஏக்கரில் பஸ் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இங்கு புதிய புறநகர் பஸ் நிலையம் கட்டுவதற்காக தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். ரூ.393.74 கோடி செலவில் கட்டப்படும் இந்த பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு வரும்போது தெற்கு நோக்கி செல்லும் அனைத்து பஸ்களும் இங்கிருந்து இயக்கப்படும்.

எஸ்கலேட்டர் வசதியுடன் புதிதாக அமைய உள்ள கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் 250 பஸ்கள் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றிச் செல்லும் அளவுக்கு விசாலமாக கட்டப்படுகிறது. இதுதவிர 350 ஸ்பேர் பஸ்கள் நிறுத்துவதற்கும் இடவசதி ஏற்படுத்தப்படுகிறது.

300 கார், 3500 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் ‘பார்க்கிங்’ வசதியுடன் இங்கு உருவாக்கப்படுகிறது.

கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பஸ்நிலையத்துக்கு மக்கள் பயணிக்க மாநகர பஸ் சேவை அதிக அளவில் இயக்கவும் ஏற்பாடு செய்யப்படும்.

கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமையும் போது சென்னை மற்றும் பெருங்களத்தூரில் பெருமளவு போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும் அந்த பகுதியில் ஒரு மேம்பாலமும் கட்டப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #EdappadiPalanisami #ADMK

Tags:    

Similar News