செய்திகள்

சேரன்மகாதேவி அருகே பழிக்குப்பழியாக 2 பேர் வெட்டிக்கொலை

Published On 2019-02-02 14:32 GMT   |   Update On 2019-02-02 14:32 GMT
சேரன்மகாதேவி அருகே பழிக்குப்பழியாக 2 பேரை 6 பேர் கொண்ட கும்பல் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை:

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரை சேர்ந்தவர் சுடர்மணி (வயது 23). இவரது நண்பர் கோவில்பட்டி பசும்பொன் நகரை சேர்ந்த கணேசன்(25). இவர்கள் இருவரும் நேற்று இரவு பத்தமடை அருகே உள்ள கான்சாபுரத்தில் உள்ள சுடர் மணியின் பாட்டி வீட்டில் தங்கி இருந்தனர். இரவு 11 மணியளவில் அவர்கள் இருவரும் வீட்டு முன்பு அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது 6 பேர் கொண்ட கும்பல் அரிவாள், வாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்தது. அவர்கள் சுற்றி வளைத்து சுடர்மணியையும், கணேசனையும் சரமாரியாக வெட்டினார்கள். இதில் சுடர் மணியின் கழுத்து, உடலில் அரிவாள் வெட்டு விழுந்தது. பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். கணேசன் சிறிய காயங்களுடன் உயிர் தப்பி வீட்டிற்கு பின்புறமாக ஓடினார்.

ஆனால் அந்த கும்பல் அவரை விடாமல் ஓட ஓட விரட்டியது. எனினும் கணேசன் அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக அருகில் உள்ள தோட்டத்துக்குள் புகுந்தார். விடாமல் துரத்திய அந்த கும்பல் சுற்றி வளைத்து கணேசனை வெட்டியது. இதில் கணேசனும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி சுடர்மணியின் தாயார் சுப்பு லட்சுமி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்துக்கு நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்தி குமார், உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஸ் ராவத் போலீஸ் இன்ஸ் பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் விரைந்து சென்று சுடர் மணியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

கணேசன் உடலை போலீசார் அந்தப்பகுதியில் சல்லடை போட்டு தேடினார்கள். சுமார் 1 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகே கணேசன் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதை கண்டு பிடித்தனர்.

கொலை செய்யப்பட்ட 2 பேர் உடலையும் மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக் தகவல்கள் கிடைத்தன. அதன் விபரம் வருமாறு:-

கொலை செய்யப்பட்ட சுடர்மணியின் அண்ணன் மனைவிக்கும், வீரவநல்லூர் கிழாக்குளத்தை சேர்ந்த செல்வம் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு இருந்தது. இந்த பிரச்சினையில் சுடர்மணி, அவரது நண்பர் கணேசன் மற்றும் சிலர் சேர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு மேலப்பாளையம் கருங்குளத்தில் வைத்து செல்வத்தை சரமாரி வெட்டிக்கொலை செய்தனர்.

இந்த கொலையில் மேலப் பாளையம் போலீசார் சுடர்மணியையும், கணேசனையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு நெல்லை கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் ஜாமீனில் விடுதலையான சுடர்மணியும், கணேசனும் வீரவநல்லூரில் தங்கி இருந்தால் பிரச்சினை ஆகிவிடும் என்று, திருப்பூர் பகுதிக்கு சென்று தங்கி இருந்தனர்.

இந்த வழக்கு இன்று நெல்லை கோர்ட்டில் விசாரணை நடைபெற இருந்தது. இதில் ஆஜராக சுடர்மணியும், கணேசனும் ஊருக்கு வந்தனர். அவர்கள் வீரவ நல்லூரில் தங்கி இருக்காமல், பத்தமடை அருகே கான்சா புரத்தில் தாத்தா வீட்டில் தங்கி இருந்தனர்.

இதை அறிந்த செல்வத்தின் சகோதரர் புலிகுட்டி என்ற மகேஷ் மற்றும் அவரது உறவினர்கள் 5 பேர் சேர்ந்து சுடர்மணியையும், கணேசனையும் பழிக்குப் பழியாக கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டது. போலீஸ் விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து கொலையாளிகளை பிடிக்க முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தப்பி ஓடிய புலி குட்டி என்ற மகேஷ் உள்பட 6 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தையொட்டி வீரவநல்லூர், கிழாக்குளம், கான்சாபுரம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News