செய்திகள்

பொன்னூஞ்சல் திருவிழா - பெண் குழந்தைகளை தோளில் சுமந்த தாய்மாமன்கள்

Published On 2018-12-24 06:47 GMT   |   Update On 2018-12-24 06:47 GMT
தாய்மாமனின் தலைசிறந்த உறவையும், பெண் குழந்தைகளின் தெய்வீக தன்மையையும் போற்றும் வகையில் கொங்கு தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சார மரபு மாறாமல் பொன்னூஞ்சல் விழா நடத்தப்பட்டு வருகிறது. #PonnunjalFestival
தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ளது பண்டைய கொங்கு 26 நாடுகளின் தலைமையிடமான தற்போதைய சங்கரண்டாம்பாளையம் பட்டக்காரர் அரண்மனையில் திருவாதிரையை முன்னிட்டு 3 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் பொன்னூஞ்சல் திருவிழா நேற்று பாரம்பரிய முறைப்படி நடந்தது.

இவ்விழா குறித்து கொங்கு பெரிய குலத்தை சேர்ந்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பொன்னூஞ்சல் விழாவில் கலந்து கொண்டனர்.

முன்னதாக பெரியநாயகி அம்மன் உட்பட 7 கோவில்களில் சிறப்பு அபிசேகங்கள் நடத்தப்பட்டு குடும்பத்தில் முதலாவதாக பிறந்த பெண் குழந்தைக்கு பட்டாடைகள், அணிகலன்கள் அணிவித்து விநாயகர் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு 16 வகை சீர்வரிசைகளுடன் காத்திருக்கும் 12 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு நெற்றியில் தாய்மாமன் தங்க பட்டம் கட்டி தனது தோள் மீது அமர வைத்து ஊர்வலமாக சுமந்து வந்து தங்கத் தகடுகளால் வேயப்பட்ட ஊஞ்சலில் அமர வைக்கப்பட்டனர்.

குழந்தைகளுக்கு உறவினர்கள் வெண்சாமரம் வீச பெரியநாயகி அம்மனாகவே பெண் குழந்தையை ஊஞ்சலில் ஆட வைத்தனர்.

கரிகால சோழனின் மகள் ஆதிமந்தை என்பவரை சேர நாட்டு மன்னன் அட்டன் ஆத்தி என்பவருக்கு மணம் முடிப்பதற்கு ஆதிமந்தையின் தாய்மாமன் இரும்பிடர் தலையர் பேருதவி செய்தார். அதற்கு நன்றியாக இரும்பிடர் தலையர் வம்சாவழியில் வந்த கொங்கு வேளாளர் பெரியகுல பெண்களுக்கு பொன்னூஞ்சல் பரிசாக வழங்கப்பட்டு, அந்த பொன்னூஞ்சலில் ஆடும் உரிமையும் வழங்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. 

தாய்மாமனின் தலைசிறந்த உறவையும், பெண் குழந்தைகளின் தெய்வீக தன்மையையும் போற்றும் வகையில் கொங்கு தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சார மரபு மாறாமல் இன்று வரை பொன்னூஞ்சல் விழா நடத்தப்பட்டு வருகிறது. #PonnunjalFestival

Tags:    

Similar News