செய்திகள்
வத்தலக்குண்டு- கொடைக்கானல் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

கஜா புயல் முடிந்தும் தீராத சோகம் - கொடைக்கானலில் மீண்டும் நிலச்சரிவு

Published On 2018-11-19 05:35 GMT   |   Update On 2018-11-19 05:35 GMT
கஜா புயல் முடிந்த பின்பும் கொடைக்கானலில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். #CycloneGaja #Kodaikanal #Landslide
கொடைக்கானல்:

கஜா புயல் திண்டுக்கல் மாவட்டத்தை சுருட்டி வாரிச்சென்றது. பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களும் நாசமானது.

குறிப்பாக கொடைக்கானல் மலைப் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் நகர், மேல்மலை மற்றும் கீழ்மலை பகுதியில் மரங்கள் முறிந்து விழுந்தது. மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. மேலும் 200-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்து உள்ளன.

இதனால் கடந்த 5 நாட்களாக மலை கிராமங்களில் பொதுமக்கள் கடும் தவிப்புக்குள்ளாகி உள்ளனர். மேலும் வத்தலக்குண்டு- கொடைக்கானல் சாலையில் குருசடி, அடுக்கம் பகுதியில் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு மீண்டும் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

ஆனால் 2 அரசு பஸ்கள், ஒரு தனியார் பஸ் உள்ளிட்ட 6 வாகனங்கள் மட்டுமே சென்றன. இந்த நிலையில் மயிலாடும்பாறை பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேல்மலை கிராமங்கள், பழனி சாலை உள்ளிட்ட இடங்களில் பெரும்பாலான மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. ஒரு சில இடங்களில் ஊழியர்கள் வராததால் பொதுமக்களே சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருவதால் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் என்பதால் சீரமைப்பு பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

மேலும் மேல்மலை கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், கிளாவரை, கூக்கால் மற்றும் புறநகர் பகுதிகளான செண்பகனூர், அட்டகடி, கே.பி.என். பாறை, இருதயபுரம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் மற்றும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் காய்கறிகள் விலையும் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் பல இடங்களில் போக்குவரத்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கொடைக்கானல் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (19-ந் தேதி) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வினய் அறிவித்துள்ளார்.  #CycloneGaja #Kodaikanal #Landslide


Tags:    

Similar News