செய்திகள்

இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு டெபாசிட் கூட கிடைக்காது- தினகரன் பேட்டி

Published On 2018-11-16 11:41 GMT   |   Update On 2018-11-16 11:41 GMT
இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு டெபாசிட் கூட கிடைக்காது என்று பாப்பிரெட்டிப்பட்டியில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தினகரன் பேசினார். #dinakaran #byelection #admk

கம்பைநல்லூர்:

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் அரசின் வளர்ச்சிப் பணிகள், மக்கள் நலத் திட்டங்களை புறக்கணித்து வரும் தமிழக அரசை கண்டித்து, பாப்பிரெட்டிப் பட்டியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இந்த உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

அ.தி.மு.க. தொண்டர்கள் 90 சதவீதம் பேர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் உள்ளனர். இதில் உள்ளவர்கள் அனைவரும் கட்சியின் விசுவாசிகள், உண்மையான தொண்டர்கள். அ.தி.மு.க.வில் அமைச்சர்களும், கட்சியின் தலைமை கழக கட்டிடம் மட்டுமே உள்ளது. தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத ஆட்சியால் அனைத்து தரப்பு மக்களும் கொதிப்படைந்து உள்ளனர்.

இந்த நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டப் பேரவை உறுப்பினர்களின் தொகுதிகள் உள்பட 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தால், அதில் அ.ம.மு.க. வேட்பாளர்கள் தான் வெற்றிப் பெறுவார்கள். இந்த இடைத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு டெபாசீட் கூட கிடைக்காது. 18 சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் சென்றால் நாங்கள் நிச்சயம் வெற்றிப் பெறுவோம். ஆனால், உச்ச நீதிமன்றம் சென்றால் தீர்ப்பு வருவதற்கு சுமார் 2 வருடங்கள் ஆகும். நீதிமன்ற தீர்ப்பு வருவதற்குள் அ.தி.மு.க. ஆட்சிக் காலம் முடிந்து விடும். எனவே, ஒருநாளும் தமிழகத்தில் இந்த மக்கள் விரோத ஆட்சி நீடிக்க கூடாது என்பதற்காகவே, 18 சட்டப் பேரவை தொகுதி உறுப்பினர்களும் மேல்முறையீடு செய்ய வில்லை.

அதேபோல், வரும் 2019-ல் தமிழகத்தில் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றிப் பெற அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொண்டர்கள் உழைக்க வேண்டும். 40-க்கு 40 தொகுதிகளில் நாம் வெற்றிப் பெற வேண்டும் என்பது லட்சியம். அதில் 37 மக்களவைத் தொகுதிகளில் வெற்றிப் பெறுவது நிச்சயம். இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் சக்தி தமிழக மக்களிடம் உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வதற்கு 90 நாட்கள் கால அவகாசம் உள்ளது. அதுவரையிலும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க முடியாது. எனவே 18 தொகுதிகளுக்கும் உடனே இடைத்தேர்தல் வராது.

அதேசமயம் திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு உடனே இடைத்தேர்தல் வரலாம்.

பாரதீய ஜனதாவுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு எந்தவிதமான தேர்தல் கூட்டணியும் இல்லை. பாரதீய ஜனதாவுடன் நாங்கள் கூட்டணி வைப்போம் என்று ஒரு சில ஊடகங்கள் தான் தவறான தகவல்களை தெரிவித்து வருகின்றன.

மாநிலங்களின் நலன்களை பாதுகாக்க மத்திய ஆட்சியில் மாநில கட்சிகளுக்கு உரிய பிரதி நிதித்துவம் கிடைக்க வேண்டும் என்ற மனப்போக்கு மக்களிடையே ஏற்பட்டு வருகிறது. இதன் ஒரு பிரதிபலிப்பாக தமிழகத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு பொதுமக்களிடையே ஆதரவு பெருகி வருகிறது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணிக்கு எந்த கட்சி வந்தாலும் பரிசீலிப்போம். கூட்டணி அமைத்தோ, தனித்து நின்றோ வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார். #dinakaran #byelection #admk

Tags:    

Similar News