செய்திகள்
நாகர்கோவில் மீனாட்சிபுரம் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை வெள்ளம்.

கஜா புயல் எதிரொலி - குமரி மாவட்டத்தில் பலத்த மழை

Published On 2018-11-15 05:39 GMT   |   Update On 2018-11-15 05:39 GMT
கஜா புயல் எதிரொலியாக குமரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது. முக்கடல் அணை பகுதியில் பலத்த மழை பெய்தது. #CycloneGaja #TNRains
நாகர்கோவில்:

வங்கக்கடலில் உருவான கஜா புயல் இன்று மாலை கடலூர்-பாம்பனுக்கு இடையே கரையை கடக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. கஜா புயல் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

குமரி மாவட்டத்திலும் பரவலாக மழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் நேற்று மாலை சுமார் 1 மணி நேரமாக கனமழை பெய்தது. இதனால் கோட்டார், செம்மாங்குடி ரோடு, கே.பி. ரோடு, மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இரவும் விட்டு விட்டு மழை பெய்தது.

முக்கடல் அணை பகுதியில் பலத்த மழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக 64.7 மி.மீ. மழை பதிவானது. பூதப்பாண்டி, சுருளோடு, ஆணைக்கிடங்கு, அடையாமடை, புத்தன் அணை மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்து வருகிறது. அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 27.15 அடியாக இருந்தது. அணைக்கு 546 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 507 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.30 அடியாக உள்ளது. அணைக்கு 199 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 245 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இன்று காலை நிரம்பி வழிந்தது. 25 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் நேற்று 24.90 அடியாக இருந்தது. இன்று காலை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது. அணை நிரம்பியதையடுத்து மறுகாலில் தண்ணீர் சீறிப் பாய்ந்து செல்கிறது.

மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-

பேச்சிப்பாறை-12, பெருஞ்சாணி-22.8, சிற்றாறு-1-2.6, சிற்றாறு-2-3.6, மாம்பழத்துறையாறு-27, முக்கடல்-64.7, நாகர்கோவில்-27.8, பூதப்பாண்டி- 2.8, சுருளோடு-13.4, கன்னிமார்-2.6, பாலமோர்-15.2, ஆணைக்கிடங்கு-18, அடையாமடை-23, புத்தன்அணை-23.4, திற்பரப்பு-4.8. #CycloneGaja #TNRains



Tags:    

Similar News