செய்திகள்

திருவள்ளூரில் சத்துணவு ஊழியர்கள் 3-வது நாளாக போராட்டம்

Published On 2018-10-27 06:32 GMT   |   Update On 2018-10-27 06:32 GMT
திருவள்ளூரில் சத்துணவு ஊழியர்கள் 3-வது நாளாக போராட்டம் நடைபெறுகிறது. இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. #Nutritionstaff

திருவள்ளூர்:

சத்துணவு ஊழியர்கள் காலமுறை ஊதியம் ஓய்வூதியமாக ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகவளாகம் முன்பு நேற்று முன்தினம் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் 113 பேர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து நேற்றும் திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சமையல் செய்து அங்கேயே உண்டு உறங்கி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இதில் மாவட்டத் தலைவர் சிவா, மாநில செயற்குழு உறுப்பினர் கலைமணி, மாநிலத் தலைவர் சுந்தரம்மாள், மாவட்டச் செயலாளர் சந்திரசேகரன், மாநிலச் செயலாளர் ஆண்டாள், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் இளங்கோவன், மாவட்டச் செயலாளர் காந்திமதி நாதன், உள்பட பலர் பங்கேற்றுள்ளனர்.

இன்று 3வதுநாளாக போராட்டம் நடைபெறுகிறது. இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News