செய்திகள்

இந்து அமைப்புகள் கோரிக்கைப்படி சபரிமலை கோவிலை மத்திய அரசு ஏற்குமா? பொன் ராதாகிருஷ்ணன்

Published On 2018-10-20 13:36 GMT   |   Update On 2018-10-20 13:36 GMT
இந்து அமைப்புகள் விடுத்துள்ள கோரிக்கைப்படி சபரிமலை கோவிலை ஏற்பது குறித்து மத்திய அரசு கவனத்தில் கொள்ளும் என பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். #BJP #Sabarimala #PonRadhakrishnan
கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் இன்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

சபரிமலை விவகாரத்தை கேரள அரசு உதாசீனப்படுத்துவது சரியல்ல. பொறுப்புகளை தேவசம் போர்டு நிர்வாகத்திடம் கொடுத்து விட்டு அமைதியாக இருக்கக்கூடாது.

சபரிமலையில் பக்தர்களுக்கு மட்டும் தான் இடம் உள்ளது. சமூக ஆர்வலர்களுக்கு, சமூக செயல்பாட்டாளர்களுக்கு இடம் இல்லை. சபரிமலைக்கு இப்போது சென்ற பெண்கள் சமூக ஒற்றுமையை குலைக்க கூடியவர்கள். நம்பிக்கையை அழிக்க கூடியவர்கள்.

சபரிமலை விவகாரம் தொடர்பாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது அரசாங்கம் பழிவாங்கும் நோக்கத்துடன் நடவடிக்கை எடுக்கிறது.

சபரிமலை கோவிலை சிறப்பு சட்டம் மூலம் மத்திய அரசு கையில் எடுக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதனை மத்திய அரசு கவனத்தில் கொள்ளும்.

அ.தி.மு.க. சர்க்கஸ் கூடாரம் என்று தி.மு.க. தலைவர் கூறியுள்ளார். தி.மு.க.வில் இருந்து அ.தி.மு.க. பிரிந்து வந்ததால் அவர் அப்படி கூறியிருப்பார். தி.மு.க., அ.தி.மு.க. இடையே நடப்பது வார்த்தை போர் அல்ல. அது தெருவில் நடக்கும் போர்.

பஞ்சாப் ரெயில் விபத்து மிகவும் துரதிர்ஷ்ட வசமானது. இந்த விபத்து எதனால் நடந்தது என்பது குறித்து விரிவான விசாரணைக்கு பிறகே தெரிய வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மகாத்மா காந்தி 150-வது பிறந்தநாளை யொட்டி ஆரோக்கியமான உணவு பழக்கம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரசார பயணம் இன்று கன்னியாகுமரி வந்தடைந்தது.

இது தொடர்பாக கன்னியாகுமரியில் நடந்த விழிப்புணர்வு உணவு கண்காட்சியை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். #BJP #Sabarimala #PonRadhakrishnan
Tags:    

Similar News