செய்திகள்

கே.கே.நகரில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கூட்டத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published On 2018-09-23 11:53 GMT   |   Update On 2018-09-23 11:53 GMT
கே.கே.நகரில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கூட்டத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பேசிய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #ADMK #Bombthreat

போரூர்:

சென்னை கே.கே. நகர் ராணி அண்ணா நகர் குடியிருப்பு சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு ரூ. 1 லட்சத்து 42 ஆயிரம் நிதி வழங்கும் நிகழ்ச்சி அப்பகுதியில் நடந்தது.

இதில் விருகம்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. வி.என். ரவி கலந்து கொண்டார். நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் ‘கே.கே. நகரில் எம்.எல்.ஏ. பங்கேற்கும் நிகழ்ச்சியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது’ என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார்.

இதுபற்றி உடனடியாக போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அசோக் நகர் உதவி கமி‌ஷனர் வின்சென்ட் ஜெயராஜ், கே.கே. நகர் இன்ஸ்பெக்டர் பாலமுரளி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் ஜூலியுடன் நிகழ்ச்சி நடைபெற்ற இடம் முழுவதும் சோதனை நடத்தினர்.

ஆனால் அங்கு வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. வெறும் புரளி என்பது கண்டறியப்பட்டது.இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ. பங்கேற்ற நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பேசிய மர்ம நபர் குறித்து கே.கே. நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதி நேற்று இரவு பரபரப்பாக காணப்பட்டது. #ADMK #Bombthreat

Tags:    

Similar News