செய்திகள்

பழவேற்காடு முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி 2-வது நாளாக மீனவர்கள் குடும்பத்துடன் போராட்டம்

Published On 2018-09-18 07:11 GMT   |   Update On 2018-09-18 07:11 GMT
பழவேற்காடு முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி 2-வது நாளாக மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #Fishermen #Fishermenstruggle

பொன்னேரி:

பழவேற்காடு முகத்து வாரம் தூர்வாரப் படாததால் மணல் திட்டுகளாக உள்ளது. இதனால் மீனவர்கள் தங்கள் படகுகளை முகத்துவாரம் வழியாக கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பழவேற்காடை சுற்றி உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மீனவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பழவேற்காடு முகத்துவாரத்தை தூர்வார வேண்டும், அங்கு தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து 100 கிராம மீனவர்கள் நேற்று படகில் கருப்பு கொடி காட்டியபடி முகத்து வாரத்தை முற்றுகை யிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் முகத்துவார பகுதியில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

அவர்களிடம் மீன்வளத் துறை இயக்குனர் வேலன், வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தற்காலிகமாக முகத்துவாரத்தை சீரமைப்பதாக கூறினர்.

ஆனால் இதனை போராட்டக்காரர்கள் ஏற்க மறுத்து விட்டனர். அமைச்சர் மற்றும் கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்த வர வேண்டும்.

மேலும் நிரந்தரமாக பழவேற்காடு முகத்து வாரத்தை தூர்வார வேண்டும். தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் மாலையில் கலைந்து சென்று விட்டனர்.

இந்த நிலையில் இன்று 2-வது நாளாக கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் குடும்பத்துடன் பழவேற்காடு பஜாரில் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதில் பழவேற்காடு, ஆரம்பாக்கம், கோட்டை குப்பம், வைரங்குப்பம், கரிமணல், பசியாவரம் உள்ளிட்ட 100 கிராமங்களை சேர்ந்த சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டு உள்ளது. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

Tags:    

Similar News