செய்திகள்

திருச்சிற்றம்பலத்தில் நள்ளிரவு தீ விபத்து: ஓட்டல் உள்பட 7 கடைகள் எரிந்து சேதம்

Published On 2018-08-19 10:34 GMT   |   Update On 2018-08-19 10:34 GMT
திருச்சிற்றம்பலத்தில் நடந்த தீ விபத்தில் 7 கடைகள் எரிந்து ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமானது.

திருச்சிற்றம்பலம்:

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் கடைவீதியில் ஓட்டல் நடத்தி வருபவர் மணிகண்டன். இவரது ஓட்டலில் அடுப்பு தீ சரியாக அணைக்கப்படாதால் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் காற்றில் தீ பொறி பறந்து ஓட்டலில் விழுந்து தீப்பிடித்தது. இதில் அங்கிருந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அப்போது காற்று பலமாக வீசியதால் அருகில் உள்ள கடைகளுக்கும் தீ மளமளவென பரவியது.

இந்த தீவிபத்தில் மணிகண்டனின் ஓட்டல், பாண்டியனின் டீக்கடை, வெள்ளைச்சாமியின் ஓர்க்ஷாப், பெட்டிக்கடை, கணேசனின் காய்கறிகடை, ராஜேந்திரனின் பர்னிச்சர் கடை, மாரி முத்துவின் மர இழைப்பகம் ஆகிய 7 கடைகள் எரிந்து சேதமானது. இவைகளில் எரிந்து நாசமான பொருட்களின் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. தீவிபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் திருச்சிற்றம்பலம் மின்வாரிய அலுவலக ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மின் இணைப்பை துண்டித்தனர். மேலும் பட்டுக்கோட்டை, பேராவூரணி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

வருவாய் ஆய்வாளர் பார்த்த சாரதி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடம் வந்து தீவிபத்தில் பாதிக்கப்பட்ட கடைகளை பார்வையிட்டனர்.

திருச்சிற்றம்பலத்தில் நடந்த தீவிபத்தில் 7 கடைகள் எரிந்து ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமானது. வியாபாரிகள், பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News