செய்திகள்

கேரளாவுக்கு ரெயில் மூலம் குடிநீர் அனுப்பும் பணி தீவிரம்

Published On 2018-08-18 05:59 GMT   |   Update On 2018-08-18 05:59 GMT
கேரளாவில் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களுக்காக தெற்கு ரெயில்வே மூலம் குடிநீர் வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. #KeralaRain
சென்னை:

கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் வெள்ளத்தில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர். குடிக்க தண்ணீர் கூட கிடைக்காமல் கஷ்டப்படுகிறார்கள்.

கேரள மக்களுக்கு உதவ தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தெற்கு ரெயில்வே மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்காக பல்வேறு டிவிசன்களில் தண்டவாளங்களை ஏற்றிச் செல்லக்கூடிய காலி வேகன்களை தயார் செய்து சிண்டக்ஸ் தொட்டி மூலம் குடிநீர் அனுப்பும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று ஈரோட்டில் இருந்து 7 வேகன்களில் 38 குடிநீர் தொட்டிகளில் திருவனந்தபுரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. செங்கல்பட்டு, தண்டையார்பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்தும் குடிநீர் கொண்டு செல்லப்பட்டன.

இது தவிர 15 ஆயிரம் பெட்டிகளில் குடிநீர் பாட்டில்களும் அனுப்பப்பட்டுள்ளது. 3 ரெயில்களில் குடிநீர் கொண்டு சென்றால் தொடர்ச்சியாக இந்த பணி நடைபெறும் என்று அதிகாரிகள் கருதுவதால் ரெயில்வே பொருட்களை எடுத்து செல்லக்கூடிய வேகன்களை ஒன்று சேர்த்து இன்னும் அதிகளவு குடிநீரை கொண்டு செல்ல தெற்கு ரெயில்வே அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

15 ரேக்குகளில் 80-க்கும் மேலான குடிநீர் தொட்டிகளை எடுத்து செல்வதன் மூலம் கேரள மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க முடியும். இன்று அல்லது நாளை மீண்டும் குடிநீர் ஏற்றிக் கொண்டு திருவனந்தபுரத்திற்கு ரெயில் செல்ல தயாராகிக் கொண்டிருக்கிறது.

இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், கேரளாவில் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். ஆதலால் தமிழகத்தில் இருந்து ரெயில் மூலம் அதிகபட்சமாக எவ்வளவு தண்ணீர் கொண்டு செல்ல முடியுமோ அந்த அளவிற்கு எடுத்து செல்ல வேகன்கள் சேகரிக்கப்படுகிறது.

ஈரோட்டில் இருந்து தண்ணீர் எடுத்து செல்ல தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. திருவனந்தபுரம் வரை குடிநீர் கொண்டு செல்லப்படும். பின்னர் அங்கிருந்து தேவைப்படும் பகுதிகளுக்கு வாகனங்கள் மூலம் எடுத்து செல்லப்படும் என்றனர். #KeralaRain
Tags:    

Similar News