செய்திகள்

அதிகாரிகளை கவர்னர் மிரட்டுகிறார்- நாராயணசாமி குற்றச்சாட்டு

Published On 2018-08-05 11:03 GMT   |   Update On 2018-08-05 11:03 GMT
அதிகாரிகளை கவர்னர் கிரண்பேடி மிரட்டுகிறார் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். #narayanasamy #kiranbedi

புதுச்சேரி:

முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

டெல்லியில் நேற்று முன் தினம் நடந்த சேவை வரி (ஜி.எஸ்.டி.) தொடர்பான கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன். அப்போது புதுவையில் சிறு மற்றும் குரு தொழில் செய்யும் வியாபாரிகள் சேவை வரியால் பாதிக்கப்பட்டு 35 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. எனவே, ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் என்று கேட்டு கொண்டேன்.

சில பொருட்களுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது. இதனை குறைத்தால் பல தொழிற்சாலைகள் புதுவைக்கு வர வாய்ப்பு உள்ளது. என்று கூறினேன். இதனை மத்திய அரசு ஏற்கும் என்று நம்புகிறேன்.

புதுவையில் வழக்கம் போல் கவர்னர் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். பல இடங்களுக்கு சென்று அவர் ஆய்வு செய்யலாம். ஆனால், விதிமுறைகளை மீறி அதிகாரிகளின் கூட்டத்தை நடத்த கூடாது.

தனது உத்தரவை பின்பற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுவது ஏற்புடையதல்ல. அதிகாரிகளை கவர்னர் மிரட்டுகிறார். அதிகாரிகளுக்கு அவர் நேரடியாக உத்தரவிட முடியாது.

கவர்னர் அதிகாரம் குறித்து உச்சநீதிமன்றம் சரியான தீர்ப்பு வழங்கி உள்ளது. அதனை அவர் பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும். நானும் பலமுறை எடுத்து கூறியுள்ளேன். எந்த தகவலையும் அவர் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களிடம் தெரிவிக்க வேண்டும். ஆனால், அவர் விளம்பரத்துக்காக செய்து வருகிறார்.

தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தை உலக தரத்தில் உயர்த்த மத்திய மீன்வளத்துறையிடம் கேட்டு கொண்டேன். அதற்கான திட்ட வரைவை அனுப்பி வைத்தால் ரூ.10 கோடி வழங்குவதாக மத்திய அரசு கூறி உள்ளது.

மத்திய விமான கழகத்தின் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் புதுவையில் 10 இடங்களில் தலா ரூ.1 கோடி செலவில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது.

புதுவை காங்கிரசில் முக்கிய பொறுப்பில் இருந்த ஜோசப் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இதையடுத்து நான் விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் தமிழக காவல்துறை அதிகாரிகளிடம் பேசி கொலையாளிகளை பிடிக்க கேட்டு கொண்டேன்.

அதன் அடிப்படையில் குற்றவாளிகள் 6 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இது தொடர்பான குற்றவாளிகளை கைது செய்வதாக தமிழக போலீசார் உறுதி அளித்துள்ளனர்.

புதுவை போலீசார் சிறப்பாக செயல்பட்டு பல்வேறு குற்ற சம்பவங்களை முன்கூட்டியே தடுத்துள்ளனர். மேலும் போலீஸ் அதிகாரிகளை அழைத்து குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ஆலோசனை கூறி உள்ளேன்.

புதுவையில் முதல் கட்டமாக 8 பேருக்கு போலீஸ் சூப்பிரண்டு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், உதவி சப்-இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கப்படும். மேலும் புதிதாக 750 போலீசார் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார். #narayanasamy #kiranbedi

Tags:    

Similar News