செய்திகள்

சாரல் மழை தீவிரம் - களக்காடு தலையணையில் வெள்ளம்

Published On 2018-07-14 06:17 GMT   |   Update On 2018-07-14 06:17 GMT
சாரல் மழை தீவிரம் அடைந்து வருவதால் களக்காடு தலையணையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

களக்காடு:

களக்காடு சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை காலத்தை மிஞ்சும் வகையில் வெயில் கொளுத்தி வந்தது. இந்நிலையில் கடந்த இரு தினங்களாக சூறை காற்று வீசி வருகிறது. அவ்வவ்போது சாரல் மழையும் பெய்து வருகிறது. சாரலுடன் காற்றும் வீசுவதால் குளிர்ச்சி ஏற்பட்டு, இதமான சூழல் நிலவுகிறது. இதுபோல களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையிலும் சாரல் மழை பெய்து வருகிறது. சாரல் மழையினால் மலைப்பகுதியில் உள்ள அருவிநீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.

இதையடுத்து களக்காடு தலையணையிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. தடுப்பணையை மூழ்கடித்தவாறு காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வனப்பகுதியில் நீடிக்கும் மழையினால் தொடர்ந்து தண்ணீர் அதிககரித்த வண்ணம் உள்ளது. இதனால் தடுப்பணை அருவியில் சுற்றுலா பயணிகள் குளியல் நடத்த வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். அங்கு கயிறு கட்டி தடுப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனினும் ஆற்றின் ஓரமாக நின்று குளியல் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காட்டாற்று வெள்ளம் கரைபுரள்வதால் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


களக்காடு பகுதியில் வீசிய பலத்த காற்றினால் களக்காடு ஆற்றங்கரை தெருவில் நாவல் மரத்தின் கிளை முறிந்து மின் வயர்கள் மீது விழுந்தது. இதில் வயர்கள் அறுந்தன.

மேலும் திருக்கல்யாணதெரு , விநாயகர் கோவில் வரையுள்ள 3 மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் களக்காடு மின் வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து மின்சாரத்தை துண்டித்தனர்.

Tags:    

Similar News