செய்திகள்

கர்நாடகத்தில் பலத்த மழை - காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2018-06-10 12:08 GMT   |   Update On 2018-06-10 12:08 GMT
தமிழக-கர்நாடக காவிரி ஆற்றுப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. #rain

சேலம்:

கர்நாடக மாநிலத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. காவிரி ஆறு உற்பத்தியாகும் தலைக்காவிரி, பாகமண்டலா பகுதிகளில் நேற்று கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குடகு மாவட்டத்தில் பெய்த மழையால் முக்கிய அணையான கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கபினி ஹேரங்கி அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் தமிழக-கர்நாடக காவிரி ஆற்றுப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காவிரியில் வெள்ளம் ஓடுகிறது.

தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் இன்று காலை 8 மணிக்கு நீர்வரத்து 4ஆயிரத்து 700 கன அடியாக அதிகரித்தது.

இந்த நீர் இன்று மாலை ஒகேனக்கல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்யும் மழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 2500 கன அடிதண்ணீர் வருகிறது.

இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 1,786 கன அடி தண்ணீர்வந்தது. இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. நேற்று 39.62 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 39.8 அடியாக உயர்ந்தது.

Tags:    

Similar News