செய்திகள்

தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு இடங்கள் குறைகிறது- நாராயணசாமி தகவல்

Published On 2018-06-09 11:42 GMT   |   Update On 2018-06-09 11:42 GMT
தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு இடங்கள் குறைந்திருப்பதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். #Congress #Narayanasamy
புதுச்சேரி:

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கோப்பு தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தோம். கோப்பு வருவதில் கால தாமதம் ஏற்பட்டது.

நிதித்துறை காலதாமதம் ஏற்பட்டபோது நிதித்துறை பொறுப்பு வகிக்கும் மந்திரி பியூஸ்கோயலை தொடர்பு கொண்டு பேசினேன். உடனடியாக அவர் ஒப்புதல் அளித்தார்.

இருப்பினும் மத்திய அரசின் பங்களிப்பு திட்டங்களுக்கு நிதி பெறுவது தொடர்பாக சில விளக்கங்களை உள்துறை அமைச்சகம் கேட்டது. நேரில் சென்று மத்திய இணை செயலாளரை சந்தித்து தெரிவித்துள்ளேன். இதனால் ஓரிரு நாளில் பட்ஜெட்டுக்கான அனுமதி கிடைக்கும்.

மத்திய அரசின் கால தாமதத்திற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் அரசியல் குறுக்கீடு இருப்பதாக நான் கூற முடியாது. பட்ஜெட்டுக்கு ஒப்புதல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் சட்டமன்ற கூட்டத்தை தொடங்கினோம். இருப்பினும் கவர்னருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்த வேண்டியிருந்தது.

தற்போது அதை முடித்துள்ளோம். பட்ஜெட்டுக்கு அனுமதி கிடைத்தவுடன் மீண்டும் சட்டசபை கூடும். மத்திய அரசு நிதி குறைந்து கொண்டே வருகிறது. 42 சதவீதம் அளிக்கப்பட்ட சதவீதம் 27 சதவீதமாக குறைத்துள்ளனர்.

மத்திய அரசிடம் கூடுதலாக நிதி பெற அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து எடுத்து வருகிறோம். சுற்றுலா திட்டங்கள் மூலம் கூடுதலாக நிதி பெற கோப்புகள் அனுப்பியுள்ளோம். அரசின் வருவாயை பெருக்கவும் நடவடிக்கை எடுத்து உள்ளோம். கேரளா போன்ற மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்களை புதுவையில் நடைமுறைப்படுத்தவும் ஆலோசித்து வருகிறோம்.

நீட் தேர்வினால் எம்.பி.பி.எஸ். இடம் கிடைக்காத 2 மாணவிகள் தமிழகத்தில் இறந்துள்ளனர். கண்டமங்கலத்தை சேர்ந்த ஒரு மாணவி வி‌ஷம் அருந்தி சிகிச்சை பெற்று வருகிறார். இது வருத்தம் அளிக்கிறது.

ஏழை, எளிய கிராமபுறத்தை சேர்ந்த சாதாரண குடும்பத்தை சேர்ந்த மாணவிகள் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியவில்லை. இதனால் இளைய சமுதாயத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தினோம். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினோம். 5 ஆண்டுக்கு புதுவைக்கு விலக்கு அளிக்க வேண்டும் என சட்டம் இயற்றி மத்திய அரசுக்கு அனுப்பினோம்.

ஆனால் மத்திய அரசு இதை கண்டுகொள்ளவில்லை. சமீபத்தில் மத்திய மந்திரி நிர்மலாசீத்தாராமன், மாணவிகள் இறப்பு சம்பவத்தை கேலியாக சித்தரித்து பேசியுள்ளார். இது மிகவும் வருந்தத்தக்கது. பிளஸ்-2 தேர்வில் அதிக மார்க் எடுத்த மாணவர்கள் மீண்டும் ஒரு நுழைவுத்தேர்வை எதிர்கொண்டு அதிலும் வெற்றி பெற வேண்டும் என்பது தேவையற்றது. மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

ஏ.டி.எம். கொள்ளை தொடர்பாக தற்போது முக்கிய குற்றவாளிகள் 2 பேரும், உதவிய 10 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளி சந்துருஜி போலீசாருக்கு சவால் விட்டுள்ளார்.

எனவே, அவரை உடனடியாக பிடிக்க உத்தரவிட்டு உள்ளேன். ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் அரசியல் தலையீடு, குறுக்கீடு கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளேன்.

ஏப்ரல் 18-ந்தேதி ஏ.டி.எம். கொள்ளை வெளிப்பட்டது. ஜூன் 18 வருவதற்கு முன்பாகவே அதுதொடர்பான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கில் சி.பி.சி.ஐ.டி, சைபர் கிரைம், எஸ்டிஎப் ஆகியவை இணைந்து செயல்படுகின்றனர்.

சந்துருஜி கைது செய்யப்பட்ட பிறகுதான் முழுமையான தகவல்கள் கிடைக்கும். இதில் சர்வதேச தொடர்புகள் இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். அப்படியிருந்தால் அதற்கேற்ற விசாரணைக்கு உத்தரவிடப்படும்.

அனைத்து கல்லூரிகளையும் ஒருங்கிணைத்து சென்டாக் மூலம் மாணவர்கள் சேர்க்கும் நடைமுறையை அமல்படுத்தி உள்ளோம். இதற்கான இணையதளத்தில் ஒரே நேரத்தில் அனைத்து மாணவர்களும் விண்ணப்பித்ததால் இணையதள திறன் குறைந்துபோய்விட்டது.

தற்போது அதன் திறனை 2 அல்லது 3 மடங்காக உயர்த்தும்படி கூறியுள்ளோம்.

புதுவையை சேர்ந்த 753 பேர் எம்.பி.பி.எஸ். இடத்திற்கு விண்ணப்பித்துள்ளனர். பிற மாநிலங்களை சேர்ந்த 1,183 பேரும், வெளிநாட்டை சேர்ந்த 3 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த ஆண்டு 3 தனியார் மருத்துவ கல்லூரிகள் தலா 150 இடங்களில் அரசுக்கு இடங்களை ஒதுக்கி தந்தனர். தற்போது பிம்ஸ் மருத்துவக்கல்லூரியில் 150 இடங்களில் 50 இடங்களை மருத்துவ கவுன்சில் குறைத்துள்ளது. இதனால் பிம்ஸ் கல்லூரியில் மொத்தம் 100 இடம்தான் உள்ளது.

எனவே, 3 கல்லூரிகளிலும் சேர்த்து 400 இடம்தான் உள்ளது. இதனால் அரசு ஒதுக்கீடு இடங்கள் குறையும். இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். #Congress #Narayanasamy
Tags:    

Similar News