செய்திகள்

கைதியின் உடல் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைத்து பாதுகாப்பு - கோர்ட்டு உத்தரவால் நடவடிக்கை

Published On 2018-06-06 08:56 GMT   |   Update On 2018-06-06 08:56 GMT
விசாரணை முடியும் வரை பரத்ராஜாவின் உடலை தற்போதைய நிலையிலேயே பாதுகாப்பாக வைக்க கோர்ட்டு உத்தரவுப்படி பரத்ராஜா உடலை பாதுகாப்பாக வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
நெல்லை:

தூத்துக்குடி அண்ணா நகரைச் சேர்ந்தவர் பரத் என்ற பரத்ராஜா (வயது 34). இவர் ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று பாளை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். கடந்த 17-ந்தேதி பரத்ராஜா, தனது சகோதரர் திருமணத்துக்காக பரோலில் வீட்டுக்கு சென்றார்.

இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி தூத்துக்குடி கலவரம் தொடர்பாக, வீடு வீடாக சோதனை செய்த போலீசார் பரத்ராஜா வீட்டிலும் சோதனை செய்து அவரை கைது செய்தனர். அப்போது தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்தில் வைத்து பரத்ராஜாவை போலீசார் அடித்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து பரத் ராஜாவை தூத்துக்குடி கலவர வழக்கிலும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி பேரூரணி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி பரத்ராஜாவின் பரோல் முடிந்ததால் அவரை மீண்டும் பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

கடந்த 30-ந்தேதி பரத் ராஜா பாளை சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறை அதிகாரிகள் அறிவித்தனர். மேலும் அவரது உடலை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி அங்கு பிரேத பரிசோதனை முடித்து உறவினர்களிடம் உடலை ஒப்படைக்க பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் அவரது உறவினர்கள், பரத்ராஜா போலீசார் தாக்கியதால் பலியாகி விட்டார் என்றும், அதனால் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கியதுபோல இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி அவரது உடலை பெற்றுக் கொள்ள மறுத்து விட்டனர். கடந்த 7 நாட்களாக அவரது உடல் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் உள்ளது.

இந்த நிலையில் அவரது சகோதரர் செல்வசவுந்தர் மதுரை ஐகோர்ட் கிளையில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் தனது சகோதரர் பரத்ராஜா மரணத்தில் மர்மம் உள்ளது. அவரது உடலில் பலத்த காயங்கள் உள்ளது. எனவே தடய அறிவியல் துறை பேராசிரியர்கள் தலைமையில் மறு பிரேத பரிசோதனை நடத்தி கோர்ட்டில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

இதை விசாரித்த நீதிபதிகள், “விசாரணை முடியும் வரை பரத்ராஜாவின் உடலை தற்போதைய நிலையிலேயே பாதுகாப்பாக வைக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து கோர்ட்டு உத்தரவுப்படி பரத்ராஜா உடலை பாதுகாப்பாக வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதைத்தொடர்ந்து நெல்லை அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் உள்ள குளிர்பதன பெட்டியில் பரத்ராஜாவின் உடல் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் செல்வசவுந்தர் நேற்று தூத்துக்குடியில் விசாரணை நடத்திய தேசிய மனித உரிமை ஆணையத்திடமும் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

அதில், “தனது சகோதரர் பரத்ராஜா பரோலில் வந்துள்ளார் என்பதையே போலீசார் ஏற்க மறுத்து அவரை கைது செய்து, சரமாரியாக அடித்து உதைத்து, நடக்க முடியாத நிலையில் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்க உத்தரவிட்டும் போலீசார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்காமல் பாளை சிறையில் அடைத்து விட்டனர். எனவே பரத்ராஜாவின் மரணத்துக்கு தூத்துக்குடி தென்பாகம் போலீசாரும், பாளை சிறை காவலர்களுமே காரணம் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
Tags:    

Similar News