செய்திகள்

பலியான 13 பேர் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறிய சரத்குமார் ரூ.50 ஆயிரம் நிதி வழங்கினார்

Published On 2018-06-01 07:38 GMT   |   Update On 2018-06-01 07:38 GMT
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேர் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறிய ச.ம.க. தலைவர் சரத்குமார் ரூ.50 ஆயிரம் நிதி வழங்கினார்.#ThoothukudiFiring #Sarathkumar
தூத்துக்குடி:

தூத்துக்குடி துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் பலர் காயம் குணமடைந்து வீட்டிற்கு திரும்பி விட்ட நிலையில் 48 பேர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

எதிர்ப்பு காரணமாக பலியானர்களின் குடும்பத்தினரை பெரும்பாலான கட்சி தலைவர்கள் சந்திக்க முடியவில்லை. நடிகர் ரஜினிகாந்த் மட்டும் பலியான 9 பேரின் குடும்பத்தினரை தூத்துக்குடி வந்திருந்த போது தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு வரவழைத்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார்.

இந்நிலையில் ச.ம.க. தலைவர் சரத்குமார் துப்பாக்கி சூட்டில் காயமடைந்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் துப்பாக்கி சூட்டில் பலியானோரின் வீட்டிற்கு சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

தூத்துக்குடி பகுதியில் உள்ள 11 பேர் வீட்டிற்கும் நேற்று சென்று சந்தித்து ரூ.50 ஆயிரம் நிதிஉதவி வழங்கினார். அவர்களில் தூத்துக்குடி மாசிலாமணிபுரம் 1-வது தெருவைச் சேர்ந்த சண்முகம் குடும்பத்தினர் மட்டும் நிதியை பெறவில்லை. மற்றவர்கள் சரத்குமார் வழங்கிய நிதியை பெற்றுக்கொண்டனர்.

இன்று காலை ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குறுக்குசாலை பகுதியை சேர்ந்த தமிழரசன் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறி நிதி வழங்கினார். பின்பு உசிலம்பட்டியில் உள்ள ஜெயராமன் வீட்டிற்கும் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். #ThoothukudiFiring #Sarathkumar
Tags:    

Similar News