செய்திகள்

குழந்தை கடத்தல் பீதியில் வாலிபரை பைக்கில் தூக்கிச் சென்று தாக்குதல் - பொன்னேரியில் 2 பேர் கைது

Published On 2018-05-11 09:14 GMT   |   Update On 2018-05-11 09:14 GMT
குழந்தை கடத்தல் பீதியில் வாலிபரை பைக்கில் தூக்கிச் சென்று தாக்கிய சம்பவம் தொடர்பாக பொன்னேரியில் 2 பேர் போலீசார் கைது செய்தனர்.
பொன்னேரி:

திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, பழவேற்காடு, பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குழந்தை கடத்தல் பீதி ஏற்பட்டுள்ளது.

இதனால் ஊருக்குள் புகும் வெளியாட்களை பொதுமக்கள் தாக்கும் சம்பவம் தொடர்ந்து வருகிறது.

நேற்று முன்தினம் பழவேற்காட்டில் குழந்தை கடத்தல் பீதியில் மனநோயாளி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். தொடர்ந்து பீதி நிலவுவதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதனை போக்க போலீசார் கிராமப்பகுதிகளில் ரோந்து சுற்றி வருகிறார்கள். குழந்தை கடத்தல் பீதி குறித்து அவர்கள் பொதுமக்களுக்கு ஆட்டோ மூலம் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

என்றாலும் குழந்தை கடத்தல் பீதியில் தாக்குதல் சம்பவம் தொடர்ந்து வருகிறது. பொன்னேரி அருகே தனியார் நிறுவன ஊழியரை குழந்தை கடத்த வந்ததாக நினைத்து பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொன்னேரியை அடுத்த இருளிபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். தனியார் நிறுவன ஊழியர். இவர் வேலை பார்க்கும் மெதூரைச் சேர்ந்த நண்பரின் வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர் பஸ் ஏறுவதற்காக அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் லட்சுமணனிடம் விசாரித்தனர். ஆனால் அவரது விளக்கத்தை கேட்காத வாலிபர்கள் குழந்தையை கடத்த வந்ததாக நினைத்தனர்.

பின்னர் லட்சுமணனை சரமாரியாக தாக்கினர். மேலும் அவரை மோட்டார்சைக்கிளில் தூக்கிச் சென்று கிராம மக்களிடம் ஒப்படைத்தனர். ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் லட்சுமணனை தாக்கினர். இதில் அவர் மயக்கம் அடைந்தார்.

தகவல் அறிந்ததும் பொன்னேரி போலீசார் விரைந்து வந்து லட்சுமணனை மீட்டனர். அவருக்கு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக மெதூர் காலனியைச் சேர்ந்த சரண்ராஜ், மகேந்திரன் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News