செய்திகள்

நிர்மலா தேவி மீதான புகாரை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும் - பல்கலைக்கழக பேராசிரியர்கள்

Published On 2018-04-17 06:47 GMT   |   Update On 2018-04-17 06:47 GMT
மாணவிகளை தவறான வழிக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி மீதான புகாரை சி.பி.சி. ஐ.டி. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மதுரை:

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி. இவர் கல்லூரி மாணவிகளை பாலியலில் ஈடுபடுத்த ஆசை வார்த்தை காட்டியதாக எழுந்த புகாரில் நேற்று மாலை கைது செய்யப்பட்டார்.

அவரிடம் அருப்புக்கோட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதான நிர்மலா தேவிக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள உயர் அதிகாரிகள் சிலர் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்த கவர்னர் பன்வாரிலால் புரோகித், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானத்தை நியமித்துள்ளார்.

பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை, 5 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்துள்ளார். பல்கலைக்கழக விசாரணைக்குழு இன்று விசாரணையை தொடங்க இருந்த நிலையில் இந்த விசாரணை குழுக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக பேராசிரியர்கள், அலுவலர்கள் கூட்டமைப்பு (ஜேக்) இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழக நுழைவு வாயிலில் திரண்ட 100-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள், நிர்மலா தேவி மீதான புகாரை பல்கலைக்கழகத்தில் உள்ள உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தக் கூடாது. கவர்னர் அமைத்த தனி நபர் விசாரணை ஆணையத்தின் மீதும் நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்தனர்.

நிர்மலா தேவியுடன் பல்கலைக்கழகத்தில் உள்ள உயர் அதிகாரிகள் தொடர்பு வைத்துள்ளனர். இந்த தொடர்பு காரணமாக நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளை பாலியலுக்கு அழைத்துள்ளதாக புகார் வலுத்துள்ளது.

பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் என்பவர்கள் யார்? துணைவேந்தர், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், டீன், சின்டிகேட்-செனட் உறுப்பினர்கள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆவர்.

இவர்கள் மீதான புகாரை விசாரிக்க இவர்களையே விசாரணைக்குழுவாக அமைத்தால் அந்த விசாரணை எப்படி இருக்கும்?

எனவே துணைவேந்தர் அமைத்துள்ள விசாரணைக் குழுவை உடனடியாக கலைக்க வேண்டும். பேராசிரியை நிர்மலா தேவி அடிக்கடி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு வந்துள்ளார். அங்குள்ள விடுதியில் தங்கியிருந்த நிர்மலா தேவி நள்ளிரவு நேரத்திலும் காரில் வந்து சென்றுள்ளார்.

மேலும் பல்கலைக்கழகத்தில் நடந்த புத்தாக்க பயிற்சியில் கலந்துகொண்ட நிர்மலா தேவி பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட அன்று மாலை தான் சஸ்பெண்டு செய்யப்பட்டிருக்கிறார்.

எனவே நிர்மலா தேவி விவகாரத்தில் நிறைய மர்மங்கள் உள்ளன. இவற்றை எல்லாம் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது அரசு தான்.

எனவே சி.பி.சி.ஐ.டி. விசாரித்தால் தான் உண்மை வெளிவரும். உடனடியாக சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பல்கலைக்கழகம் முன்பு திரண்ட பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக கோ‌ஷங்களையும் எழுப்பினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News