செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு உணவுத்தொகை உயர்வு- எடப்பாடி பழனிசாமி உத்தரவு

Published On 2018-04-10 04:44 GMT   |   Update On 2018-04-10 04:44 GMT
இல்லங்களில் தங்கி இருக்கும் மனநலம் பாதிக்கப்பட்டருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் உணவூட்டுத் தொகையை மாதம் ஒன்றுக்கு ரூ.400-ல் இருந்து ரூ.650 ஆக உயர்த்தி வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
சென்னை:

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

31 மாவட்டங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான இல்லங்கள் அரசின் நிதியுதவியுடன் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்பட்டு வருகின்றன. குடும்பத்தினரால் கைவிடப்பட்டு சாலைகள் மற்றும் இதர பொது இடங்களில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், மீட்புத் திட்டத்தின் கீழ் மீட்கப்பட்டு அந்த இல்லங்களில் சேர்க்கப்படுகின்றனர்.

தேவையான உறைவிடம், உணவு, மருத்துவம் மற்றும் மறுவாழ்வுப் பணிகள் போன்றவை அந்த இல்லங்களில் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு இல்லத்திலும் 50 மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் மொத்தம் ஆயிரத்து 550 பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர்.

தற்போது இந்த இல்லங்களில் உள்ள பயனாளிகளுக்கு உணவூட்டுத் தொகையாக மாதம் ஒன்றுக்கு ரூ.400 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஆண்டொன்றுக்கு ரூ.74.40 லட்சம் தமிழ்நாடு அரசினால் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மனநலம் பாதிக்கப்பட்ட பயனாளிகளின் நலத்தைக் கருத்தில் கொண்டு, தற்போது வழங்கப்பட்டு வரும் உணவூட்டுத் தொகையை மாதம் ஒன்றுக்கு ரூ.400-ல் இருந்து ரூ.650 ஆக ஏப்ரல் 2018 முதல் உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.46.50 லட்சம் கூடுதல் செலவினம் ஏற்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
Tags:    

Similar News