செய்திகள்

தமிழக நிலவரம் குறித்து எங்களது விளக்கத்தில் கவர்னர் திருப்தி அடைந்தார் - எடப்பாடி பழனிசாமி

Published On 2018-04-04 14:12 GMT   |   Update On 2018-04-04 14:41 GMT
தமிழகம் முழுவதும் பல்வேறு விவகாரங்களில் எதிர்க்கட்சியினர், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து பேசினார்.
சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. டெல்டா பகுதியில் காவிரி போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், தேனி பகுதியில் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அங்குள்ள பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு தமிழகம் முழுவதும் போராட்ட களமாக மாறியுள்ள சூழலில், நேற்று டெல்லி சென்ற கவர்னர் பன்வாரிலால் புரோகித் பிரதமர் மற்றும் உள்துறை மந்திரியை சந்தித்து தமிழக சூழல் குறித்து விளக்கினார்.

இந்நிலையில், நாளை தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாளை முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை ராஜ்பவனில் இன்று சந்தித்து பேசினார். அவருடன் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்றிருந்தனர்.

சிலமணி நேரம் நடந்த ஆலோசனைக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் நிலவும் பல்வேறு போராட்டங்கள் குறித்து ஆளுநரிடம் விளக்கமளித்தோம். எங்களது விளக்கத்தில் அவர் திருப்தி அடைந்தார். மேலும், கோடைக்காலம் வர உள்ள நிலையில், தண்ணீர் பிரச்சனை குறித்து கேட்டறிந்தார். அதையும் விளக்கினோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். #TamilNews
Tags:    

Similar News