செய்திகள்

சூறாவளி காற்றுடன் திருப்பூரில் பலத்த மழை

Published On 2018-03-23 09:52 GMT   |   Update On 2018-03-23 09:52 GMT
திருப்பூரில் நேற்று பகல் முழுவதும் சுட்டெரிக்கும் வெயில் வாட்டியது. சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
ஊட்டி:

மலைகளின் அரசியான நீலகிரியில் குளுகுளு சீசன் தொடங்க இன்னும் 10 நாட்களே உள்ளன. இந்நிலையில் கடந்த வாரம் தொடர் மழை பெய்தது. இதனால் கருகிய புல்வெளிகளில் பசுமை திரும்பியது. ஏரி, அணைகளில் நீர்மட்டம் கணிசமான அளவுக்கு உயர்ந்தது.

இந்நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் கோடை மழைய பெய்யத்தொடங்கியது. சிறிது நேரத்தில் ஆலங்கட்டி மழை கொட்டியது. இதனால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் கோடப்பமந்து பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. இதனால் கேரட் பயிர்கள் சேதம் ஆனது.

ஆலங்கட்டி மழை ஊட்டி, தொட்டபெட்டா, மைநல்லா, பேரார், குன்னூர் உள்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கொட்டியது. இதமான சீதோஷ்ணநிலை நிலவியதால் சுற்றுலா பயணிகள் இயற்கை காட்சிகளை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

கோவையில் நேற்று கருமேகங்கள் வானில் திரண்டிருந்தது. பின்னர் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

திருப்பூரில் நேற்று பகல் முழுவதும் சுட்டெரிக்கும் வெயில் வாட்டியது. மாலை கருமேகங்கள் திரண்டன. பின்னர் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. புஷ்பா தியேட்டர் ரவுண்டானா, ஊத்துக்குளி ரோடு, எம்.ஜி.ஆர். சிலை ஆகிய இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழை அளவு திருப்பூரில் 48 மி.மீட்டரும், அவினாசியில் 3 மி.மீட்டார், பல்லடத்தில் 2 மி.மீட்டராக பதிவானது.

வால்பாறை பகுதியில் கடந்த 10 நாட்களாகவே அவ்வப்போது மழை பெய்துவருகிறது. இந்த மழை ஒரு சில சமயங்களில் கனமழையாகவும், பல சமயங்களில் லேசான மழை யாகவும் பெய்து வருகிறது.

வால்பாறை பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கடுமையான வெப்பமும் வறட்சியும் நிலவிவந்தது. இதனால் வனப்பகுதிகள் வறண்டன, ஆறுகள் நீர் வீழ்ச்சிகளில் தண்ணீர் வற்றிப் போய்விட்டது. பரம்பிக்குளம் ஆழியார் திட்ட அணையாக விளங்கும் சோலையார் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. நீர்பிடிப்பு பகுதிகள் வறண்டு போய்விட்டது.வால்பாறை பகுதியில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வனப்பகுதிகளிலும், எஸ்டேட் வனப்பகுதிகளிலும் ஆங்காங்கே லேசான காட்டுத்தீயும் பிடிப்பதற்கான சூழ்நிலையும் இருந்துவந்தது.

இந்த நிலையில் நேற்று காலை முதல் மேகமூட்டத்துடன் வானிலை இருந்தது. மதியம் 1.45 மணிமுதல் வால்பாறையில் பலத்த காற்றும் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்தது. இதனால் சாலையில் தண்ணீர் ஓடியது. இந்த மழை வால்பாறை நகர் பகுதியில் மட்டுமல்லாமல் ஒரு சில எஸ்டேட் பகுதிகளிலும் பெய்தது. இந்த மழைகாரணமாக வறண்டு போய்க் கொண்டிருந்த தேயிலைச் செடிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. #tamilnews

Tags:    

Similar News