செய்திகள்
மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

மதுரை புதூரில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் மறியல்- 400 பேர் கைது

Published On 2018-03-22 09:52 GMT   |   Update On 2018-03-22 09:52 GMT
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 400-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.
மதுரை:

தமிழ்நாடு மின்வாரிய மதுரை மாநகர் மாவட்ட அனைத்து ஒப்பந்த தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அமைச்சர் கூறியபடி குறைந்த பட்ச ஊதியம் ரூ. 380 வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

மதுரை புதூர் மின் வாரிய தலைமை அலுவலகத்தில் கண்களில் கறுப்புத்துணி கட்டிக்கொண்டு நேற்று பெண்கள் உள்பட பலரும் போராட்டம் நடத்தினர்.

கடந்த 2-ந் தேதி முதல் போராட்டம் நடத்தி வரும் ஒப்பந்த பணியாளர்கள் இன்று சாலைக்கு வந்து போராட திட்டமிட்டனர். மின்வாரிய தலைமை அலுவலகம் முன்புள்ள சாலையில் மறியல் போராட்டத்திற்கு அவர்கள் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்த தகவல் கிடைத்ததும் தல்லாகுளம் போலீஸ் உதவி கமி‌ஷனர் அசோகன், இன்ஸ்பெக்டர்கள் பெத்துராஜ் (தல்லாகுளம்), பாலசுந்தரம் (புதூர்) மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

சாலைக்கு வந்து மறியல் செய்தால் கைது செய்வோம் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். இருப்பினும் அதனை மீறி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோ‌ஷமிட்டனர். இதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 400-க்கும் மேற்பட்ட பணியாளர்களை, போலீசார் கைது செய்தனர். #Tamilnews
Tags:    

Similar News