செய்திகள்

பாராளுமன்றம் முன்பு 26-ந் தேதி முதல் விவசாயிகள் உண்ணாவிரதம் - பி.ஆர்.பாண்டியன்

Published On 2018-03-19 07:49 GMT   |   Update On 2018-03-19 07:49 GMT
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி பாராளுமன்றம் முன் வருகிற 26-ந் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். #cauverymanagementboard #PRPandian
மன்னார்குடி:

மன்னார்குடியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்குப்பின் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:

காவிரி மேலாண்மை வாரியம், பங்கிட்டு ஒழுங்காற்றுக் குழுவினை காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பினை பின்பற்றி உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று வரும் மார்ச் 30-ந்தேதிக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும். இதை வலியுறுத்தி டெல்லி பாராளுமன்றம் முன் வருகிற 26-ந் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 வரை போராட்டம் நடத்தப்படும்.



காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட உள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ஆதரித்து வாக்களிக்க வேண்டும். மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் தனது பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்துகிறோம். காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன், எரிவாயு எடுக்கும் திட்டங்களுக்கான அனுமதியை ரத்து செய்ய மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்.

2016-17-ம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகையை புள்ளியியல் துறை நிர்ணயம் செய்த தொகையை முழுமையாக காப்பீட்டு நிறுவனங்கள் பெற்றுள்ளன. ஆனால் விவசாயிகளுக்கு 30 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

எனவே தமிழக அரசு துறை செயலாளர்கள் தலைமையில் உயர்மட்டக்குழு அமைத்து விசாரணை செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் முன்வர வேண்டும்.

கூட்டுறவு சங்க தேர்தல் அரசியல் தலையீடு இன்றி வெளிப்படை தன்மையுடன் நடத்துவதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். விவசாயிகள் மட்டுமே பொறுப்புகளுக்கு நியமனம் செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.  #cauverymanagementboard #PRPandian #tamilnews

Tags:    

Similar News