செய்திகள்

புதுவையில் தி.க. பொதுக்கூட்டத்தில் செருப்பு வீச்சு- பா.ஜனதாவினர் மோதல்

Published On 2018-03-18 17:00 GMT   |   Update On 2018-03-18 17:00 GMT
வில்லியனூரில் நேற்று இரவு திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தல் ஒருவர் செருப்பு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி:

புதுவை மாநிலம் வில்லியனூரில் நேற்று இரவு திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக சென்னையை சேர்ந்த வீரமர்த்தினி, அருள் மொழி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

அப்போது கூட்டத்தில் கடவுள் குறித்து விமர்சித்து பேசினர். இதனால் ஆத்திரம் அடைந்து கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர் மேடையை நோக்கி திடீரென்று செருப்பை வீசினார். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

உடனே தி.க.வினரும், பாரதீய ஜனதாவினரும் அங்கு திரண்டனர். தொடர்ந்து கூட்டம் நடத்துவதற்கு பா.ஜனதாவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தி.க.வினருக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், கம்யூனிஸ்டு கட்சியினரும் பா.ஜனதாவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து இரு தரப்பினரும் மோதிக் கொள்ளும் சூழல் உருவானது. போலீசார் சமாதானம் செய்ய முயன்றும் இயலவில்லை.

பா.ஜ.க.வினர் தொடர்ந்து கூட்டம் நடத்தக்கூடாது என கூறி ரகளையில் ஈடுபட்டனர். அப்போது ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு கலவரம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து பதட்டத்தை தணிக்க போலீசார் தடியடி நடத்தினார்கள். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கூட்டம் நடந்தது.

Tags:    

Similar News