செய்திகள்

ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் துப்பாக்கி முனையில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நகை கொள்ளை

Published On 2018-03-16 04:38 GMT   |   Update On 2018-03-16 04:38 GMT
ஓசூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபரை துப்பாக்கி முனையில் மிரட்டி ரூ. 50 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் நில ஆவணங்களை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் அத்திப்பள்ளி உள்ளது. இந்த ஊரை சேர்ந்தவர் நாகராஜ்ரெட்டி. இவர் ஓசூர் மற்றும் பெங்களூருவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் குடும்பத்துடன் அத்திப்பள்ளியில் உள்ள சாகாம்பரி லேட்அவுட் பகுதியில் வசித்து வருகிறார்.

நேற்று இரவு இவரும், இவரது குடும்பத்தினரும் தூங்கி கொண்டு இருந்தனர். நள்ளிரவு 10-க்கும் மேற்பட்ட கொள்ளை கும்பல் காலிங் பெல்லை அழுத்தியது. நாகராஜ்ரெட்டி கதவை திறந்ததும் அவரை துப்பாக்கி முனையில் மிரட்டினர். பின்னர் வீட்டுக்குள் புகுந்த கொள்ளை கும்பல் வீட்டில் இருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்தனர்.

பின்னர் பீரோவில் இருந்த பணம் மற்றும் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள நில ஆவணங்களை எடுத்து கொண்டனர். அதன் பிறகு அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து நாகராஜ்ரெட்டி அத்திப்பள்ளி போலீசில் புகார் செய்தார். போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினார்கள். கொள்ளையர்கள் தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் பேசி உள்ளனர்.

மேலும் கொள்ளையர்கள் நில ஆவணங்களை கேட்டதால் ரியல் எஸ்டேட் தகராறில் யாரோ ஒருவர் ஆட்களை ஏவி இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்த கொள்ளை கும்பலை கூண்டோடு பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அத்திப்பள்ளி சாகாம்பரி லேட்-அவுட்டில் இதர வீடுகளில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை போலீசார் கைப்பற்றி கொள்ளையர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News