செய்திகள்

விருதுநகரில் காதல் திருமணம் செய்த பெண் டாக்டர் தற்கொலை

Published On 2018-02-22 03:57 GMT   |   Update On 2018-02-22 03:57 GMT
விருதுநகரில் காதல் திருமணம் செய்த பெண் டாக்டர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:

விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை பார்ப்பவர் இருசப்பன். இவரது மனைவி டாக்டர் ஜனனி (வயது 33), மனநல மருத்துவர். காதல் திருமணம் செய்த இவர்களுக்கு தனுஷியா (2) என்ற மகள் உள்ளார்.

விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்த ஜனனி, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தேனி மருத்துவக்கல்லூரியின் உதவி பேராசிரியராக மாற்றப்பட்டார்.

விருதுநகர் என்.ஜி.ஓ. காலனி, கம்பர் தெருவில் வசித்து வந்த ஜனனி தினமும் இங்கிருந்து தேனிக்கு சென்று வந்தார். நேற்றுமாலை பணி முடிந்து வீடு திரும்பிய அவர், மாடி அறையில் ஓய்வு எடுத்தார். இருசப்பன் அவரை சந்தித்து நடைபயிற்சி செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்று விட்டார்.

அவர் திரும்பி வந்த பிறகும் மாடி அறையில் இருந்து ஜனனி வரவில்லை. ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பார் என இருசப்பனும் கண்டுகொள்ளவில்லை.

இரவு 9 மணி வரை ஜனனி கீழே வராததால் அவரது அறைக்கு இருசப்பன் சென்றார். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அதனை தட்டியும், செல்போன் மூலம் அழைத்துப்பார்த்தும் ஜனனியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த இருசப்பன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். விருதுநகர், பாண்டியன் நகர் போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு மின் விசிறியில் தூக்குப்போட்டு ஜனனி தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த சில நாட்களாக டாக்டர் ஜனனி பணிச்சுமை அதிகம் உள்ளதாகவும், வெளிநாட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என்றும் கூறி வந்தாராம்.

அவரது தற்கொலைக்கு இது தான் காரணமா? வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்த டாக்டர் ஜனனியின் பெற்றோரும் டாக்டர்கள் தான். அவர்கள் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வருகின்றனர். ஜனனியின் தம்பி அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார்.

மனநல மருத்துவரே தற்கொலை முடிவை எடுத்திருப்பது விருதுநகர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
Tags:    

Similar News