செய்திகள்
சப்- இன்ஸ்பெக்டர் சசிகலாவிடம், டி.எஸ்.பி. அருண் விசாரித்த போது எடுத்த படம்

கர்ப்பிணி சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய ரவுடி- உறவினர்கள் 4 பேர் கைது

Published On 2018-02-20 12:23 GMT   |   Update On 2018-02-20 12:23 GMT
வலங்கைமான் அருகே கர்ப்பிணி சப்-இன்ஸ்பெக்டரை ரவுடி தாக்கிய சம்பவம் தொடர்பாக அவரது உறவினர்கள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வலங்கைமான்:

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள அரித்துவாரமங்கலம் மேலக்காலனியை சேர்ந்தவர் காமாட்சி. இவரது மகன் மணிவேல் (வயது 30). இவர் மீது அரித்துவாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் வழக்குகள் உள்ளது. மேலும் ரவுடிகள் பட்டியலிலும் இவரது பெயர் உள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று அரித்துவாரமங்கலம் பகுதியில் மணிவேல் குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த போலீசார், மணி வேலை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். இதில் குடிபோதையில் அவர் இருந்ததால் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

இந்த நிலையில் நேற்று மணிவேல் தனது உறவினர்களுடன் அரித்துவாரமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு பணியில் இருந்த கர்ப்பிணி சப்-இன்ஸ்பெக்டர் சசிகலாவிடம் , ‘ எப்படி மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்யலாம்? என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

திடீரென அவர், சப்-இன்ஸ்பெக்டர் சசிகலாவை தாக்கினார். இதிலே கீழே விழுந்ததில் அவர் காயம் அடைந்தார். உடனே அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் வலங்கைமான் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும் நன்னிலம் போலீஸ் டி.எஸ்.பி. அருண், விசாரணை நடத்தினார். காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சசிகலாவிடம் விசாரித்தார்.

இந்த சம்பவம் பற்றி வலங்கைமான் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இதுதொடர்பாக ரவுடி மணிவேலின் தந்தை காமாட்சி, தாய் பூமயில், மனைவி புவனேஸ்வரி, சகோதரர் பழனிவேல் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்து வரும் ரவுடி மணிவேலை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

கர்ப்பிணி சப்-இன்ஸ்பெக்டரை ரவுடி தாக்கிய சம்பவம் வலங்கைமான் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
Tags:    

Similar News