செய்திகள்

சென்னை சென்ட்ரல் ரெயில்வே அலுவலகத்தில் தீவிபத்து

Published On 2018-02-20 09:57 GMT   |   Update On 2018-02-20 09:57 GMT
சென்னை சென்ட்ரல் ரெயில்வே அலுவலகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் கம்ப்யூட்டர் மற்றும் ஆவணங்கள் எரிந்து நாசமாயின. தீவிபத்து குறித்து விசாரணை நடத்த கோட்ட மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் அலுவலகம் உள்ளது. அதன் பின்பகுதியில் சென்னை கோட்டம் மேலாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

7 அடுக்கு மாடிகளை கொண்ட இந்த அலுவலகத்தில் சென்னை ரெயில்வே கோட்டத்திற்கான அனைத்து அலுவலகங்களும் உள்ளன.

ரெயில்வே உயர் அதிகாரிகள் பலருக்கும் இங்கு தனித்தனியாக அறைகள் உள்ளன. அவற்றில் குளிர் சாதன வசதியும் செய்யப்பட்டுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இன்று காலை 8 மணியளவில் இந்த கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து புகை வந்தது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிந்தது.

தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் பல்வேறு பகுதியில் இருந்து விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ மற்ற அறைகளில் பரவாமல் தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனாலும் நிதி மேலாளர் அலுவலகம் முழுவதும் எரிந்து நாசமானது. அங்கு இருந்த கம்ப்யூட்டர், டேபிள், சேர்கள், ஆவணங்கள் தீயில் எரிந்தன.

மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா? குளிர்சாதன வசதியை ஆப் செய்யாமல் போனதால் தீபிடித்ததா? என்று துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது. காலையில் பணிக்கு வந்த ஊழியர்கள் கோட்ட அலுவலக தீ விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். படிக்கட்டு வழியாகவும், லிப்ட் வழியாகவும் அலுவலகங்களுக்கு செல்லக் கூடியவர்கள் ஒரே நேரத்தில் அங்கு வந்ததால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. 4-வது மாடியில் உள்ள அனைத்து அலுவலகப் பணிகளும் இன்று பாதிக்கப்பட்டன.

தீவிபத்து குறித்து விசாரணை நடத்த கோட்ட மேலாளர் உத்தரவிட்டுள்ளார். விரைவான தீத்தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. #Tamilnews
Tags:    

Similar News